தந்தையார் தாயார்மற் றுடன்பிறந்தார் தாரங்கள் பந்தமார் சுற்றத்தார் பதியடியார் மதியணியும் எந்தையார் திருப்படிமற் றுண்ணவிசைந் தார்களையுஞ் சிந்தவாள் கொடுதுணிந்தார் தீயவினைப் பவந்துணிப்பார். | 9 | (இ-ள்) தந்தையார்......பதியடியார் - தந்தையார், தாயார், மற்று உடன்பிறந்தவர், மனைவியர்கள், பந்தமுடைய சுற்றத்தவர்கள், அவ்வூரின் உரிமை அடிமைகள் என்ற இவர்களெல்லாரையும்; மதியணியும்....இசைந்தார்களையும் - எமது தந்தையாராகிய இறைவரது திருவமுது படி நெல்லினை இன்னும் உண்ணுதற்கு இசைந்தார்களையும்; தீய....துணிப்பார் - தீயவினையின் பயனைச் சேதிப்பாராகிய நாயனார்; சிந்த....துணிப்பார் - தீயவினையின் பயனைச் சேதிப்பாராகிய நாயனார்; சிந்த...துணிந்தார் - உடல் சிதையும்படி வாளினைக்கொண்டு துண்டமாக வெட்டினர். (வி-ரை) தந்தையார்.......சுற்றத்தார் - இவர் தோன்றுதற்கு முதலில் நிற்பவர் தந்தை; அதன்பின் நிற்பவர் தாயார்; அத்தாய் வயிற்றில் முன்னும் பின்னும் வரும் அதன்பின் தொடர்புடையார் உடன்பிறந்தார்; இவர் ஒவ்வொருவர் பாலும் பற்றாகப்பந்தித்து அதன்பின் வருவோர் சுற்றத்தார் என்றிவ்வாறு வரிசைப் படுத்திய நிலைகாண்க. “தந்தையார் - தாயாருடன் பிறந்தார் - சுற்றமார்Ó என்ற திருத்தாண்டகம் ஈண்டு நினைவு கூர்தற்பாலது. பந்தமார் - பற்றுச்செய்து பந்தப்படுத்தல் குறிப்பு. பதியடியார் - பதியில் உள்ள தொடர்பு கொண்ட அடிமைகள்; இவரெல்லாம் ஒரு தொடர்பு கொண்டவர்கள். தந்தையார் முதலியவை உம்மைத் தொகைகள். மற்று உண்ண இசைந்தார்கள் - இவர்கள் தொடர்பு பற்றாது இறைவர்பால் அபராதம் செய்த அவ்வொன்றினால் கூடி ஒற்றுமைப்பட்டோராதலின் மற்று என்று வேறுபிரித்துக் கூறினார். தீயவினைப்பயன் துணிப்பார் - சிந்த வாள்கொடுதுணித்தார் - என்க; இவர் துணித்தது உடலினையேயாயினும் அது கருத்தன்று; அவ்வுடலால் ஈட்டப்பட்ட தீய வினையாகி உயிருடன் சாரும் அவ்வினைால் வரும் பாவத்தினை அவ்வாறு சாராது துணித்தனர் என்பதாம். இவ்வாறு வினைப்பயன் துணிக்கப்பட்டமையாலே இவர்கள் பாசமறுத்துத் தூய்மைபெற்று மேலுலகம் எய்தினர் என மேற் கூறப்படுதல் காண்க. துணிப்பார் - துணிப்பாராகிய நாயனார்; வினையாலணையும் பெயர். சிந்த - உடல் கூறுபட; உயிர் போம்படியாக - தந்தையார் தாயார் என்பன சிறப்புப் பன்மைகள்; வாள்கொடு - வாளினைக் கொண்டு; கொடு - இடைக்குறை; 3ம் வேற்றுமை யுருபு - கருவிப்பொருள். தீவினையின் பயன் துணிப்பார் - என்பதும் பாடம். |
|
|