அத்தனா யன்னையா யாருயிரா யமிர்தாகி முத்தனா முதல்வன்றா ளடைந்துகிளை முதறடிந்த கொத்தலர்தார்க் கோட்புலியா ரடிவணங்கிக் கூட்டத்திற் பத்தராய்ப் பணிவார்தம் பரிசினையாம் பகருவாம். | 12 | (இ-ள்) அத்தனாய்.....முத்தனாம் - தந்தையும் தாயும் ஆருயிரும் அமிர்தம் ஆகி முத்தனாகிய; முதல்வன்தாள்......வணங்கி - இறைவரது திருவடியினை உட்கொண்டதனால் சுற்றத்தின் பந்தத்தினை வேரறத்தடிந்த கொத்தாகிய அலர்களைக்கொண்ட மாலையினை அணிந்த கோட்புலி நாயனாரது திருவடியை வணங்கி; கூட்டத்தில்.....பகருவாம் - கூட்டத்தவர்களாகிய அடியார்களுள்ளே பத்தராய்ப் பணிவார் களதுதன்மையினைச் சொல்வோம். (வி-ரை) அத்தனாய்....முத்தனாம் முதல்வன் - ஆய் - ஆக்கச் சொற்கள் அதுவாந்தன்மை கொண்டிருத்தற் குறிப்புத்தருவன. எண்ணும்மைகள் விரித்துரைத்துக்கொள்க; அத்தன் முதலிய தன்மைகளை உடையனாயினும் அவற்றுட்படாது வேறு முத்தனுமாவன் என்க. முத்தன் - இவற்றுட் கட்டுப்படாது நீங்கியவன்; இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன். அடைந்து கிளைமுதல் தடிந்த - அடைந்து - அடைந்தமையாலே; இறைவரே அத்தன் முதலிய எல்லாமாவார்; ஏனையோராகிய உலக பாசத்தவர் அவ்வாறாகார் என்ற துணிவு பெற்றவராதலின் அவர்களை வேரறத் தடிந்தார் என்பதாம்; முதல் - வேர்; “நம்பொருட்டா லீன்ற தாதை விழவெறிந்தாய்; அடுத்த தாதை யினியுனக்கு நாம்Ó (1259) என்ற சண்டீச நாயனார் சரிதம் காண்க. இஃது இந்நாயனாரின் சரித சாரமாகிய முடிபு. கூட்டத்தில் - திருக்கூட்டத்தவர்களாகிய தொகையடியார்களுள்ளே; பரிசு - தன்மை; திருக்கூட்டத்தவர்களைப்பற்றிப் பண்பு மட்டிற் போற்றலாம் தகைமைத்து அன்றி, வரலாறுகள் பேசுதற்கு இயைபின்றாதலின் பரிசு என்றார்; இவ்வாறாதலின், “பொய்யடிமை யில்லாத புலவர் கூட்டத்Óதைப்பற்றி, அவர்களுள் வகைநூலிற் குறித்த கபிலர் பரணர் நக்கீரரின் வரலாறுகள் இவ்விரிநூலுட் காணவில்லை என்றும், அவர் திருவாவூரடிகளாவார் என்றும், பலவாறு நவீன ஆராய்ச்சியாள் கிளப்பிய வாதங்களுக்கு ஈண்டு இடமின்மை தெரிந்து கொள்க. |
|
|