பாடல் எண் :4146

மேவரிய பெருந்தவம்யான் முன்புவிளைத் தனவென்னோ?
யாவதுமோர் பொருளல்லா வென்மனத்து மன்றிவே
நாவலர்கா வலர்பெருகு நதிகிழிய வழிநடந்த
சேவடிப்போ தெப்போதுஞ் சென்னியிலு மலர்ந்தனவால்.
13
(இ-ள்) யாவதுமோர்...மலர்ந்தன - ஒன்றுக்கும் பொருள் அல்லாத எளியேனது மனத்தின் மட்டுமன்றிப், பெருக்கெடுத்த காவிரி ஆறு இடையீடுபட்டுக் கீறிக்காட்டிய வழியில் நடந்தருளிய திருநாவலூர்த் தலைவரது சேவடிப் போதுகள் எப்போதும் எனது தலையின் மேலும் மலர்ந்தன; மேவரிய....என்னோ? - இப்பேறு பெறுதற்கு பொருந்துதற்கரிய பெரும் தவம் யான் முன்னே விளைவு செய்தன எவையோ?
(வி-ரை) சேவடிப்போது - மனத்தகத்தும் அன்றியே - சென்னியினும் மலர்ந்தன; (இதற்கு) முன்பு - விளைத்தன தவம் என்னோ? என்க. தவம் யாதோ அறியேன் என்பது.
மனத்து மலர்தல் - நினைத்தல்; சென்னியின் - மலர்தல் - மெய்யினால் வணங்குதல். சென்னியிலும் - மனத்தேயன்றிச் சிரத்திலும் என உம்மை இறந்து தழுவியது. யாவதும் - மனத்தும் உம்மைகள் குறித்தபடி.
யாவதும் - யாதும்; வகரம் விரிக்கும்வழி விரித்தல் விகாரம். அடிப்போது - உருவகம்; எப்போதும் - முற்றும்மை.
எப்போதும் மலர்ந்தன என்பதனை முன்னுங் கூட்டுக.
மனம் - சென்னி என்பன உள்ளும் புறம்பும் நின்ற ஒரு தன்மையினை உணர்த்தின; “சிந்தையி னுள்ளுமென் சென்னியினுஞ் சேர, வந்தவர் வாழ்கவென் றுந்தீபறÓ (உந்தி - 44); “சிந்தையிலு மென்றன் சிரத்தினிலுஞ் சேரும்வகை, வந்தவனை மண்ணிடை நாம் வாராமற் - றந்தவனைÓ (களிறு 100) என்று இதனை ஞானநூல் விரித்தல காண்க. முன்பு யான் விளைத்தன பெருத்தவம் என்னோ? - விளைத்தன - நம்பிகளது திருவடிச் சிந்தையும் வணக்கமும் முன்னைப் பெருந்தவத்தாலன்றிக் கூடா என்பதாம்; விளைத்தன - தவப்பயன்கள்; முன் விளைத்தன என்னோ? - இப்பேறு பெற இப்பிறவியிற் செய்த தவங்களை யானறியேன்; ஒன்றும் செய்யவில்லை; ஆனால், இதுவோ தவமன்றிக் கூடாது; ஆதலின் முன்பு விளைத்தனவே ஆதல் வேண்டும் என்பதாம்; “மேற் செய்துழிÓ என்ற ஞான நூற்கருத்து; விளைத்தன - ஒன்றினாற் கூடா தென்றற்குப் பன்மையாற் கூறினார்.
பெருகு நதி கிழிய வழிநடந்த சேவடி - நம்பிகளும் சேரமானாரும், காவிரி நீங்கிக் காட்டிய மணல் வழியாற் சென்று திருவையாற்றினை வணங்கி மீண்டருளிய நிகழ்ச்சி குறித்தது. (3878 - 3886); நதிகிழிய - மேல்பாற்றடையுண்டும் கீழ்பால் வடிந்தும் காட்டிய; வழி - வழியின்கண்ணே.