பாடல் எண் :4147

ஈசருக்கே யன்பானார் யாவரையுந் தாங்கண்டாற்
கூசிமிகக் குதுகுதுத்துக் கொண்டாடி மனமகிழவுற
றாசையினா லாவின்பின் கன்றணைந்தாற் போலணைந்து
பேசுவன பணிந்தமொழி யினியனவே பேசுவார்.
1
(இ-ள்) ஈசனுக்கே...கண்டால் - சிவபெருமானுக்கே அன்பாகியவர்கள் எவரையும் தாம் கண்டால்; கூசி...மனமகிழ்வுற்று - கூசி மிகவும் பெருவிருப்பமுற்றுப் பரவி மனமகிழ்ச்சிபெற்று; ஆசையினால்.....அணைந்து - ஆசையினாலே தாய்ப்பசுவின் பின்பு கன்று அணைவது போலச் சேர்ந்து; பேசுவன....பேசுவார் - அவர்கள்பாற் பேசுவன எல்லாம் இனிய மொழிகளாகவே பேசுவார்கள்.
(வி-ரை) ஈசனுக்கே - இனியனவே - ஏகாரங்களிரண்டும் பிரிநிலை.
யாவரையும் - முற்றும்மை; “எவரேனும் தாமாகÓ என்ற அரசுகள் தேவாரக் கருத்து.
கூசுதல் - அவர்களது அளவிறந்த பெருமையினையும், தமது சிறுமையினையும் நோக்கி அஞ்சுதல்; “விண்ணோர்க ளேத்துதற்குக் கூசு மலர்ப்பாதம்Ó (திருவா); “கூசி மொழிந்துÓ (சித்தி - 12 - 2)
குதுகுதுத்தல் - பெருவிப்பமேலிடுதல்; குதூகலம் என்ற வழக்குக் காண்க.
ஆவின்பின் கன்றணைந்தாற்போல - அன்புமீக் கூர்ந்த நிலைக்குச் சிறக்க வழங்கும் உவமை; வினைபற்றிய உவமம். ஆசையினால் என்றதனை உவமையினும் பொருளிலும் கூட்டி உரைக்க முதலில் வைத்தார்.
பேசுவன - பேசுவனவாகிய மொழிகளை; வினையாலணையும் பெயர். அகரவீற்றுப் பலவறி சொல்; இரண்டனுருபு விரிக்க. மனம் - உளத்தின்நிலை; பணிவு - உடலின்நிலை; இனிமை - வாக்கின் தன்மை.
வகைநூலுள் இறைவன் பத்தியேபற்றிக் கூற, ஈண்டு ஆசிரியர், அப் பத்தி உருப்பட்டுப் பயனெய்து மிடமாகிய அடியார்பத்தியினை உள்ளடக்கி உரைத்தனர்.