பாடல் எண் :4148

தாவரிய வன்பினாற் சம்புவினை யெவ்விடத்தும்
யாவர்களு மர்ச்சிக்கும் படிகண்டா லினிதுவந்து
பாவனையா னோக்கினாற் பலர்காணப் பயன்பெறுவர்

மேவரிய வன்பினான் மேலவர்க்கு மேலானார்.
2
(இ-ள்) தாவரிய....கண்டால் - கெடுதலில்லாத அன்பினாலே சிவபெருமானை எவ்விடத்திலும் எவர்களாயினும் வழிபடும்படியினைக் காணப்பெற்றால்; இனிது உவந்து - இனிமையாக மகிந்து (அவ்வாறு உவந்த தன்மையால்); பாவனையால்...பெறுவார் - அவர்களது சத்தாகிய பாவனையினாலேயும் அருணோக்கத்தாலும்பலரும் காணும்படி பயன் பெறுவார்கள்; மேவரிய...மேலானார் - பொருந்துதற்கரிதாகிய அன்பின் றிறத்தாலே மேம்பாடுடையவர்களுக் கெல்லாம் மேம்பாடுடையவர்களாய் விளங்குவார்கள்.
(வி-ரை) தாவரிய - கெடுதலில்லாத; தா - கேடு; தாவு - குறைதல்; சம்பு - சுகத்துக்கிருப்பிடமானவர்.
அர்ச்சிக்குபடி - பூசிக்கும் படியினை; படி - படியை; பண்பினை. இரண்டனுருபு விரிக்க.
உவந்து - பயன்பெறுவார் என்று கூட்டுக.
பாவனையால் - நோக்கினால் - பூசனையை உவந்து நோக்கும் இப்பத்தர்களை அவ்வாறு பூசிப்பவர்கள் சத்பாவனை செய்து நன்னோக்கம் செய்தலால்; பாவனை - நோக்கம் - இவர்கள் நன்மைபெறுக என்ற எண்ணத்துடன் செய்வன.
பலர்காண - “பல்லோருங் காணவென்றன் பசுபாச மறுத்தானைÓ (திருவா).
பாவனையால் நோக்கினால் - முன்கூறியவாறன்றி, இதற்கு, இப்பத்தர்கள் அவர்களை சிவமாகப் பாவிப்பதனாலும் அவ்வாறு நோக்குதலினாலும் என்றுரைத்தனர் முன் உரைகாரர்.
மேலவர்க்கு மேலானார் - பிற மேன்மைகள் படைத்த எவர்க்கும் இவரே மேல் என்று கூறும்படி என்க.