அங்கணனை அடியாரை யாராத காதலினாற் பொருங்கிவரு முவகையுடன் றாம்விரும்பிப் பூசிப்பார் பங்கயமா மலர்மேலான் பாம்பணையா னென்றிவர்கள் தங்களுக்குஞ் சார்வரிய சரண்சாருந் தவமுடையார். | 3 | (இ-ள்) அங்கணணை....பூசிப்பார் - இறைவரையும் அடியார்களையும் ஆராமையுடைய பெருவிப்பத்தினாலே மேன்மேலும் பொங்கி வருகின்ற மகிழ்ச்சியுடனே விரும்பிப் பூசிப்பார்கள்; பங்கயம்.....தவமுடையார் - தாமரைப் பூவின்மேல் இருக்கும் பிரமதேவனும் பாம்பணையின் மேலிருக்கும் விட்டுணுமூர்த்தியும் என்ற இவர்களுக்கும் சார்தற்கரிய திருவடிகளைச் சாரும் தவத்தினை உடையவர்கள். (வி-ரை) அங்கணனை அடியாரை - மலர்மேலான் - அணையான் - எண்ணும்மைகள் தொக்கன. தவமுடையார் - முன்னைத் தவமுடையாரே பத்தர்களாவார்கள்; சார்பு - “சார்புணர்ந்துÓ (குறள்) தங்களுக்கும் - உம்மை உயர்வு சிறப்பு; சார்தல் - அடைதல். பத்தராய் - என்ற தொகை நூலுக்கு இறைவர்பாலும் அடியார்பாலும் ஒன்று போலவே பத்திசெய்வது என்று உரை விரிப்பது இத்திருப்பாட்டு. |
|
|