“யாதானு மிவ்வுடம்பாற் செய்வினைக ளேறுயர்த்தார் பாதார விந்தத்தின் பாலாகÓ வெனும்பரிவாற் காதார்வெண் குழையவர்க்காம் பணிசெய்வார் கருக்குழியிற் போதார்க ளவர்புகழ்க்குப் புவனமெலாம் போதாவால். | 4 | (இ-ள்) யாதானும்......எனும் பரிவால் - இந்த உடம்பினாற் செய்யும் செயல்கள் எவையேயாயினும் அவையெல்லாம் இடபத்தினை உயர்த்த பெருமானதுதிருவடித் தாமரைகளின் பக்கத்திற் சேரும் தகுதியுடையனவாகுக என்கின்ற அன்பினாலே; காதார்.....செய்வார் - காதிலே வெண்குழையினை அணிந்த இறைவருக்காகிய திருப்பணிகளைச் செய்பவர்கள்; கரு.....போதாவால் - கருப்பமாகிய குழியிலே செல்லமாட்டார்கள்; அவர்களது புகழுக்கு இவ்வுலகமெல்லாம் ஒப்பாகமாட்டா. (வி-ரை) பாதார விந்தம் - வடநூன்முடிபு. உருவகம்; கருக்குழி - பிறவி; உருவகம்; போதார்கள் - புகுதமாட்டார்கள். சிவனுக்காம் பணிகளே எனது செய்தொழில்களெல்லாமாகுக என்ற அன்புடன் பணி செய்கின்றவர்களுக்கு இனிப் பிறவியில்லை; இந்த அன்புடன் செய்யும் பணிகள் எவையேயாயினும் அவை சிவனுக்கேற்பனவாகும். வீடுபேற்றுக்குச் சாதனமாம் என்பது. போதா - ஒப்பாகா; போதியனவாகா. |
|
|