பாடல் எண் :4159

திருக்கயிலை வீற்றிருந்த சிவபெருமான் றிருக்கணத்தார்
பெருக்கியசீர்த் திருவாரூர்ப் பிறந்தார்க ளாதலினால்
றருக்கியவைம் பொறியடக்கி மற்றவர்தந் தாள்வணங்கி
யொருக்கியநெஞ் சுடையவர்க்கே யணித்தாகு முயர்நெறியே.
2
(இ-ள்) திருக்கயிலை...ஆதலினால் - பெருக்கிய சிறப்பினையுடைய திருவாரூர்ப் பிறந்தார்கள் திருக்கயிலையில் வீற்றிருக்கும் சிவபெருமானது கணங்களே யாவார்கள்; ஆதலினாலே; தருக்கிய....உடையவர்க்கே - செருக்குடன் எழும் ஐம்பொறிகளையும் அடக்கி மற்று அவர்களுடைய திருவடிகளை வணங்கி ஒற்றுமைப்படுத்திய மனத்தையுடையவர்களுக்கே உயர்நெறி அணியதாகும்.
(வி-ரை) பிறந்தார்கள் - கணத்தார்கள் - ஆதலினால் என்க; சிவகணத்தவர்களே அத்தவத்தினால் திருவாரூரில் வந்தவதரிக்கப்பெற்றவர்கள்; "திருவாரூர்ப் பிறக்கும் பெருமைத் தவமுடையார்" (3592). ஆதலினால் - கணத்தவர்களே இவர்களாதலினால் இவர்களது திருவடி வணங்குதல் சிவகணங்களை வணங்கிய பயன் தந்து உயர்நெறியினை அணுகச் செய்யும் எனக் காரணக் குறிப்புப்பட உரைக்க. திருக்கணங்களே என்ற தேற்றேகாரமும், ஐம்பொறியும் என்ற முற்றும்மையும் தொக்கு நின்றன.
தருக்குதல் - அகங்கரித்தெழுதல்.
ஒருக்கிய - இரண்டற ஒன்றுபடுத்தப்பட்ட.
உயர் நெறி - சிவநெறி.
இவர்கள் சிவகணங்களேயாவர் என்பது நமிநந்தியார் புராண வரலாற்றானு முணர்க. “அணித்தாய செழுநெறிÓ - வகைநூல்.
தாள்வணங்க - என்பதும் பாடம்.