நாரணற்கு நான்முகற்கு மறிய வொண்ணா நாதனையெம் பெருமானை ஞான மான ஆரணத்தி னுட்பொருள்க ளனைத்து மாகும் அண்ணலையெண் ணியகால மூன்று மன்பின் காரணத்தா லர்ச்சிக்கு மறையோர் தங்கள் கமலமலர்க் கழல்வணங்கிக் கசிந்து சிந்தைப் பூரணத்தான் முழுநீறு பூசிவாழும் புனிதர்செய லறிந்தவா புகல லுற்றேன். | 3 | (இ-ள்) நாரணற்கும்....நாதனை - விட்டுணுவுக்கும் பிரமனுக்கு அறிய வொண்ணாத இறைவரை; எம்பெருமானை - எமது பெருமானாரை; ஆரணத்தின்...அண்ணலை - ஞானமயமான வேதங்களினுட்கிடையான பொருள்களெல்லாம் ஆகின்ற பெருமையுடைய பிரானை; எண்ணிய....வணங்கி - விதிக்கப்பட்ட மூன்று சந்தியாகாலங்களிலும் அன்புகாரணமாக அருச்சிக்கும் சிவமறையோர்களுடைய தாமரை போன்ற கழல்களை வணங்கி, அத்துணைகொண்டு; கசிந்து.....புகலலுற்றேன் - மனங்கசிந்த நிறைவுடைமையாலே முழுதும்நீறு பூசிவாழும் தூயவர்களது செயலினை அறிந்தவாறு சொல்லப்புகுகின்றேன். (வி-ரை) இப்பாட்டும் பல பிரதிகளில் இல்லை; நாதனை - பெருமானை - அண்ணலை - என மூன்றுவகையாற் கூறியது சரியை கிரியை யோகம் என்ற மூன்று நெறிகளின் வழிபாட்டுரிமை உணர்த்தற்கு. அறியவொண்ணா - நெறியல்லா கெறியாற் றேடினாராதலின் இருவருங் கண்டிலர் என்றார் பேராசிரியர். ஞானமான ஆரணம் - வேதங்களின் ஞானகாண்டமானவும் வேதசிரசு என்னும் உபநிடதங்களும் ஆம்; சிவவேதியர்கள் வேதம் ஆகமம் என்ற இரண்டற்கும் உரிமையுடையவர். உட்பொருள்கள் - உட்குறிப்பாய் இதயத்துட் கொண்டு வைத்துவிளங்கும் சிறந்த உண்மைகள். எண்ணிய - எண்ணப்பட்ட; விதித்த. சிந்தை கசிந்துள்ள அப்பூரணத்தினாலே என்க; பூரணம்; நிறைவு - நிறைவாவது வேறொன்றற்கும் இடங்கொடாது முழுமையும் வியாபித்தல். முழுநீறு பூசி - முழுமையும் நீறு அணிந்து. “முழுவதுமெய் யணிவ ரன்றேÓ (4168.) அறிந்த ஆ - அறிந்த ஆறு - தொகுத்தல் விகாரம்; புனிதர் - முனிவர். |
|
|