ஆதார மாயனைத்து மாகி நின்ற வங்கணனெம் பெருமானீ ரணிந்த வேணிக் காதார்வெண் திருக்குழையா னருளிச் செய்த கற்பமநு கற்பமுப கற்பந் தானும் ஆகாதென் றங்குரைத்த வகற்ப நீக்கி யாமென்று முன்மொழிந்த மூன்று பேத மோகாதி குற்றங்க ளறுக்கு நீற்றை மொழிகுதுநம் மிருவினைகள் கழிவ தாக. | 1 | (இ-ள்) ஆதாரமாய்....குழையான் - எல்லாவற்றுக்கும் ஆதாரமாயும் எல்லாப் பொருள்களுமாகியும் நின்ற அங்கணனும், எமது பெருமானும், கங்கையைத் தரித்த சடையினையும் காதிற்பொருந்திய குழையினையும் உடையவரும் ஆகிய சிவபெருமான்; அருளிச்செய்த - சிவாகமங்களில் அருளியவற்றுள்ளே; ஆகாதென்று.....நீக்கி - கைக்கொள்ளத் தகாதென்று அங்குச் சொல்லிய அகற்பம் என்ற வகையுட்பட்டதனை நீக்கி; கற்பம்...தானாம் - கற்பமும் அநுகற்பமும் உபகற்பமும் என்ற; ஆமென்று.....பேதம் - இவை கொள்ளத்தக்கன வாகுமென்று முன்னே கூறிய மூன்றுவகைப்பட்ட; மோகாதி....நீற்றை - காமாதி குற்றங்களை நீக்கும் திருநீற்றினை; மொழிகுதும்.......ஆக - நமது இருவினைகளுக்கு கழிவு நேர்வதற்காக மொழிவோம். (வி-ரை) இதுமுதல் ஐந்து பாட்டுக்களும் பல பிரதிகளில் இல்லை. இவை ஐயப்பாடு; இவை திருநீற்றின் வகைகளையும், தன்மைகளையும், பெறும் பரிசினையும் கூறுவன. 1இவற்றைப்பற்றிய ஐயப்பாட்டின் விவரங்கள் எனது “சேக்கிழார்Ó என்ற நூலினுள் (பக் - 221 - 223) விரித்துள்ளேன். ஆண்டுக் கண்டுகொள்க. இவற்றின் பொருளைப் புராண சாரமுடையார் அமைத்துள்ளமையின் இவை முன்பே புகுத்தப்பெற்றிருத்தல் கூடும் என்று கருதப்படுகின்றது. ஆதாரமாய் - எல்லாப் பொருள்கட்கும் ஆதாரமாய் உள்ளவர்; ஆதாரம் - தாங்குதல் - நிலைபெறுவித்தல், மாயையினின்றும் தோற்றுவித்தல் என்ற பொருளில் வந்தது. ________________ 1 பெரியபுராணச் செய்யுட்டொகை மொத்தம் 4283 என்று கொண்ட ஒரு வெண்பாவை ஆதாரமாக் கொண்டு அதனையே தாபித்துத் திருவாவடுதுறைவித்துவான் திரு. சிதம்பர இராமலிங்கம் பிள்ளை அவர்கள் ஞானசம்பந்தம் பத்திரிகையில் ஒரு கட்டுரை வரைந்துள்ளார்கள். அதனுள், “திருவிருத்த நாலாயிரத்திரு நூற்றைம்பத்து மூன்றாக வகுத்துÓ என்று புராண வரலாற்றுள் (53) வரும் பாட்டுப்பாடபேத மென்றும், அது “எண்பத்து மூன்றாகÓ என்றிருத்தல் வேண்டுமென்றும் சாதித்துள்ளார்கள்; திரு. நாவலரவர்கள் பதிப்பாக வழங்கும் பதிப்புக்களில் 4281 பாடல்களே மொத்தம் காணப்பயிலுகின்றன. “காதில் வெண்குழையோன்Ó (18) என்ற திருமலைச் சிறப்புப்பகுதியிலுள்ள பாட்டும், கண்ணப்பநாயனார் புராணத்துள் “பொருப்பினில் வந்துÓ என்பது முதல் “மன்பெருமாÓ என்பது வரை (158 -162) ஐந்து பாட்டுக்களும், இங்கு முன் காட்டியபடிவரும் ஐந்து பாட்டுக்களும் இடைச் செருகல்களான வெள்ளி பாடல்கள் என நீண்டகாலமாகப் பல பெரியோர்களாலும் துணியப்பட்டன என்பது இங்குநினைவு கூர்தற்பாலது. I சரித ஆராய்ச்சிக் குறிப்புக்கள் I பக்கம் 79 - பழைய ஏட்டு சுவடியின் படம்பார்க்க. அருளிச்செய்த - அருளிச் செய்யப்பட்டவை, அகரவீற்றுப் பன்மைப் பெயர். மோகாதி - காமம், குரோதம், லோபாம், மோகம், மதம், மாச்சரியம் என்ற ஆறு தீக்குணங்கள். மோகாதி - வடமொழிச் சந்தி; கற்பம், அனுகற்பம், உபகற்பம் - என்ற மூன்றுவகைத் திருநீறும் தீக்கை பெறுதற்குரிய சைவர்களுக்கு உரியது; அகற்பம் இவையல்லாதது; தீக்கைக் குரியரல்லா தார்க்குரியது அசைவவிபூதி எனப்படும்; இதனை ஆகாதென் றங்குரைத்த அகற்பம் என்றார்; கற்ப முதலிய மூவகை நீறும் வைதிகம், இளெகிகம் என இரண்டு வகையுள் இலெகிளகத்திற் சேர்ந்தவை; இவற்றுள் வைதிகவிபூதி - பிரமன் ஓமகுண்டத்திற் றோன்றும் புரோதனி என்றும், பிராம்மணரது ஓமகுண்டத்திற் றோன்றும் சத்தியோசாதை என்றும் இருதிறப்படும்; முன்கூறிய கற்ப முதலிய மூன்றும் உற்பத்தி வேறுபாட்டால் அம்மூவகையாயின. இவற்றின் விரிவெல்லாம் சிவாகமங்களுள்ளும் சைவசமயநெறி முதலிய நூல்களுள்ளும் கண்டுகொள்க. ஆம் - ஆகும் என்பதன் இடைக்குறை; குற்றங்களறுக்கும் நீறு - உயிர்களைக் காத்தல் செய்தலின் இரட்சை என்றும், பாவங்களை நீறுசெய் தமிழித்தலின் நீறு என்றும், சிறந்த செல்வமாதலின் விபூதி என்றும், அஞ்ஞான அழுக்கைப் போக்குதலால் சாரம் என்றும், ஞான வொளியைத் தருதலின் பசிதம் என்றும் இவ்வாறு பல காரணப் பெயர்கள் போதரும் குறிப்பாம். முன்மொழிந்த மூன்றுபேதம் - கற்ப முதலிய மூன்று. மொழிவதுநம் - என்பதும் பாடம். |
|
|