பாடல் எண் :4167

இந்தவகை யாலமைத்த நீறு கொண்டே
இருதிறமுஞ் சுத்திவரத் தெறித்த பின்னர்,
அந்தமிலா வரனங்கி யாறு மெய்ம்மை
யறிவித்த குருநன்மை யல்லாப் பூமி
முந்தவெதி ரணியாதே யணியும் போது
முழுவதுமெய்ப் புண்டரஞ்சந் திரனிற் பாதி
நந்தியெரி தீபநிகழ் வட்ட மாக
நாதரடி யாரணிவர் நன்மை யாலே.
5
(இ-ள்) இந்த.....கொண்டே - முன்கூறிய இவ்வாறு அமைத்து விளைத்து எடுத்த திருநீற்றினைக் கொண்டு; இரு......பின்னர் - அகம் புறம் என்னும் இரண்டிடத்தும் சுத்திவரும்படி பாவித்து ஒரு சிறிது நிருதி மூலையிலே (தென்மேற்கில்) உரிய மந்திரத்தால் தெறித்த பின்பு; அந்தமிலா....அணியாதே - அழிவில்லாத சிவன் சந்நிதியும், தீயும், ஆறும், உண்மை நெறியினை உபதேசித்த குருவும், வழி நடையும், நன்மை சாராத பூமியும் என்றிவ் விடங்களின் முன் அணியாது; அணியும் போது - விதிப்படி அணிகின்ற காலத்தில்; முழுவது மெய்.....வட்டமாக - உடல் முழுதும் பூசுதல், திரிபுண்டரம், பிறைவடிவம், ஓங்கி யெரிகின்ற விளக்குச் சுடராகிய முக்கோணம், விளங்குகின்ற வட்டம் ஆகிய இவ்வடிவிலே; நாதனடியார்.....நன்மையாலே - சிவனடியார்கள் நன்மையினால் அணிகுவர்.
(வி-ரை) முதற் பாட்டினால், திருநீற்றின் வகைகளைக் கூறி, அதன் மேல்மூன்று பாட்டுக்களினால் மூவகைத் திருநீற்றினையும் பெறும் வகையும் பண்பும் கூறி, இப்பாட்டினால் நீறு அணியத்தக்க இடமும் அணியும் வகையும் கூறுகின்றார்.
அமைத்த - விளைவித்தெடுக்கப்பட்ட; இருதிறம் - அகமும் புறமும்; தெறித்து - சிறிதளவு எடுத்து அசுர பீடையணுகாதபடி அத்திர மந்திரத்தினால் விரலினால் தெறித்து.
அரன் - அங்கி - ஆறு - குரு - நன்மையல்லாப்பூமி - இவ்விடங்களின் எதிரில் திருநீறணியலாகாது என்பது விதி; ஆறு - நடந்து செல்லும் வழியிடை; நன்மையல்லாப் பூமி - தூய்மையில்லாத நிலம்.
மெய் முழுவதும் - இது (தூளிதம்) பொடியாக உடல் முழுதும் பூசுதல் குறித்தது.
புண்டரம் - திரிபுண்டரம் - மூன்று கீற்றுக்கள்; சந்திரனிற்பாதி - பிறை வடிவம். நந்தி எரிதீபம் - நந்துதல் இங்கு ஒளிவிட்டு - சுவாலித்து - எரியும் தன்மை குறித்தது; தீபம் - விளக்குச் சுடர் - மேல் நோக்கிய முக்கோண வடிவம். வட்டமாக அணிதல் - சிறுத்தொண்ட நாயனாருக்கு அருள் புரியவந்த வயிரவர் திருநீற்றுப்பொட்டு அணிந்த திருக்கோலம் காண்க. "இளம்பிறை தன்னைப், பெருகு சிறு மதியாக்கி...சாத்தியதென்னத் திருநுதன்மேற் றிருநீற்றுத் தனிப்பொட்டுத் திகழ்ந்திலங்க" (3687)
நன்மை - நலம்தரும் விதி.