மூவேந்தர் தமிழ்வழங்கு நாட்டுக் கப்பால் முதல்வனா ரடிச்சார்ந்த முறைமை யோரும் நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையிற் கூறும் நற்றொண்டர் காலத்து முன்னும் பின்னும் பூவேய்ந்த நெடுஞ்சடைமே லடம்பு தும்பை புதியமதி நதியிதழி பொருந்த வைத்த சேவேந்து வெல்கொடியா னடிச்சார்ந் தார்கள் செப்பியவப் பாலுமடிச் சார்ந்தார் தாமே. | 1 | (இ-ள்) மூவேந்தர்.......முறைமையோரும் - மூவேந்தர்களது தமிழ் வழங்கும் நாடுகளுக்கு அப்பால் சிவபெருமானாரது அடியினைச் சார்ந்த முறைமையினர்களும்; நாவேய்ந்த......பின்னும் - நம்பிகளது தெய்விக நாவின்கட் பொருந்திய திருத்தொண்டத் தொகையிலே துதிக்கப்பட்ட திருத்தொண்டர்களாகிய தனியடியார்களின் காலத்துக்கு முன்னும் அதன் பின்னும்; பூவேய்ந்த...அடிச்சார்ந்தாரும் - பூக்கள் பொருந்திய நீண்ட சடையின் மேலே அடம்பு மலரும் தும்பை மலரும் கங்கையும் கொன்றையும் பொருந்தும்படி சூடிய, இடபத்தைப் பொறித்த வெற்றி பொருந்திய கொடியினையுடைய சிவனது திருவடியிற் சார்ந்தார்களும்; செப்பிய...தாமே - சொல்லப்பட்ட அப்பாலு மடிச்சார்ந்தார் எனப் பெற்றவர்கள் தாமே யாவர். (வி-ரை) மூவேந்தர் தமிழ்வழங்கு நாடு - என்றது, தமிழ் வழங்காத நாடுகளும் மூவேந்தர் கீழ் நின்றன வாதலின் அவற்றுள் தமிழ் வழங்கு நாட்டை வேறு பிரித்து ஓதினார். பிறிதினியைபு நீக்கிய விசேடணம். தமிழ்வழங்கு நாட்டினை வேறு தணியாகக் கூறினமை திருத்தொண்டத் தொகையுள் போற்றப்பட்ட அடியார்கள் பெரும்பான்மையும் தமிழ் வழங்கு நாட்டினுட் சேர்ந்தவர்களாதலின் என்க; தமிழ் வழங்கும் நாடல்லாத பிறமொழி வழங்கும் 17 நாடுகளிலும் சிவனடிச் சார்ந்த தொண்டர்களுண்டு என்பதாம்; இவர்கள் இடத்தால் அப்பாலும் அடிச்சார்ந்தார். இவை சிங்கள முதலாகக் கூறப்படும். திருத்தொண்டத் தொகை.......முன்னும் பின்னும் என்பது காலத்தால் அப்பாலும் அடிச்சார்ந்தார்களைக் குறித்தது. காலத்தாலும் பெரும்பான்மை பற்றி அடியார்கள் திருத்தொண்டத் தொகையுட் டனித்தனி எடுத்துக் கூறப்பட்டார்கள். முன் - இறந்த காலத்தினையும், பின் - என்பது எதிர்காலத்தினையும் உணர்த்த நிறுத்தித் திருத்தொண்டத் தொகையுட் போற்றப்பட்ட அடியார்களின் காலத் தொகுதியை நிகழ்காலமாக வைத்து, முக்காலத்தும் என விரித்த நிலை கண்டு கொள்க. அப்பாலும் - இடத்தாலும் காலத்தாலும் அப்பால் என்று விரிநூலுள் உரை விரித்தனர் ஆசிரியர். சைவத்தின் பரந்த முற்றிய நிலையினை நாட்டிக் காட்டியருளுவது இத்திருப்பாட்டு. அடிச்சார்ந்தார் - திருவெண்காட்டடிகள் முதலாயினோர். இப் பாட்டால் சைவத்தின் சமரசம் நன்கு விளங்குதல் காண்க என்றும், சைவத்தைத் தமிழ்நாட்டளவில் கட்டி ஆளக்கருதும் கண்மூடிகள் இப்பாடலைப் பன்முறை உற்று நோக்கி உண்மை யுணர்வார்களாக என்றும் இங்கு விசேட ஆராய்ச்சியுரை காண்பாரு முண்டு. சமரசம் என்ற உரைப் பொருளுக்கு ஈண்டு ஒரு தொடர்புமில்லை. பொருளிரண்டாயினன்றோ சமரசம் காணலாம்; இங்குத் தமிழ் வழங்கு நாட்டுக்கப்பாலும் சிவனடிச்சார்ந்தோர் உண்டு என்பது தான் கருதிய பொருள் தமிழ் நாட்டுக்கப்பாலும் சிவனடிச்சார்ந்தோர் உள்ளார் என்றதனால் அங்கு உள்ளார் எல்லாரும் சிவனடிச்சார்ந்தோர் என்றாவது, அங்குள்ளன வெல்லாம் சைவநெறி என்றாவது ஆகாது; அந்நாடுகளிலுள்ள கிறித்தவம், பௌத்தம், சமணம் முதலிய புறச்சமயங்கள் எல்லாம் சைவமே என்னவும் வாராது; அவை, ரூபாவில் பைசா அணாக்கள் போல, இலைமறைகாய்கள் போலச் சைவ உண்மைகள் சிலவற்றைக்காட்டினால் அது கொண்டு அவை முழுமைச் சைவத்தோடொப்பன என்றலும் ஆகாது. அன்றியும் அமெரிக்கா, சாவகம், கடாரம் முதலிய புறநாடுகளிலும் மிகப் பழங்காலங்களில் சிவலிங்க வழிபாடு இருந்த அடையாளங்கள் இப்போதும் காணப்படுகின்றன என்பது சரித ஆராய்ச்சியாளர்கள் கண்டவுண்மை. இனிச் சமரசம் என்பது உண்மைப் பொருளில்லாத நிலையில் ஈண்டு வழங்கப்பட்டுள்ளது; எவ்வெப் பொருளையும் அவ்வவற்றின் தகுதிக் கேற்பப் படிமுறையில் (சோபான பட்சம்) வைத்து நிறுத்திக் காணுதலே சமரசம் என்பதன் உண்மைப் பொருளாம். இப்படிக்கன்றிக் காண்பன வெல்லாம் சமமே என்பது குருட்டுச் சமரசமேயாகும். இனி, எம்மொழியோ எந்நாடோ யாண்டிருப்பினும் சைவத்தின் மெய்பொருணிச்சயம் கொண்டதுவே சைவமாவது என்பது “அப்பால் முதல்வனா ரடிச்சார்ந்த முறைமை யோரும்Ó என்றதனாலும், “சேவேந்து வெல்கொடியா னடிச்சார்ந்தார்Ó என்றதனாலும் விளக்கப்பட்டது. “சிவன் கழற்கே ஒருக்குமனத் தொடுÓ என்ற வகைநூலும் காண்க. இவற்றை யெல்லாம் விடுத்துக், காலமும் இடமும் கூறி அப்பால் என்ற துணையானே, தமிழ் நாட்டின் மேல் உள்ளன வெல்லாம் சைவத்தின் முடிந்ததிறமே யாம் என்று முடிப்பது உண்மை யுணராதார் கூற்றேயாம். அன்றியும், “பேசி லத்திசை யொவ்வா பிறதிசைÓ (46) என்ற திருவாக்கின் கருத்தும் உணரத் தக்கது. இக்கூறியவை யெல்லாம் எண்ணும்போது கண்மூடிகள் யாவர் என்பது போதரு மென்று விடுக்க. தமிழ் விளங்கு - என்பதும் பாடம். |
|
|