பாடல் எண் :4170

செற்றார்தம் புரமெரித்த சிலையார் செல்வத்
திருமுருகன் பூண்டியினிற் செல்லும் போதிற்
சுற்றாருஞ் சிலைவேடர் கவர்ந்து கொண்ட
தொகுநிதியின் பரப்பெல்லாஞ் சுமந்து கொண்டு
முற்றாத முலையுமையாள் பாகன் பூத
முதற்கணமே யுடன்செல்ல முடியாப் பேறு
பெற்றார்தங் கழல்பரவ வடியேன் முன்னைப்
பிறவியினிற் செய்ததவம் பெரிய வாமே.
2
(இ-ள்) செற்றார்தம்...போதில் - பகைவர்களது திரிபுரங்களை எரித்த மலை வில்லை ஏந்திய சிவபெருமானது செல்வ நிறைந்த திருமுருகன் பூண்டியின் வழியிற் போகும்போது; சுற்றாரும்.....எல்லாம் - சுற்றி நிறைந்த வில்வேடர்கள் பறித்துக் கவர்ந்து கொண்ட மிக்க நிதியின் சுமைகளை யெல்லாம்; சுமந்து.....உடன் செல்ல - என்றும் இளமுலை நாயகியாராகிய உமை அம்மை பங்கரது முதன்மையுடைய பூதகணங்கள் தாமே சுமந்து கொண்டு உடன் போதும்படி; முடியாப் பேறு......ஆமே - அளவற்ற பெரும் பேற்றினைப் பெற்ற நம்பியாரூராது திருவடிகளைத் துதிக்க அடியேன் முன்னைப் பிறவிகளிற் செய்த தவங்கள் மிகப் பெரியனவாகும்.
(வி-ரை) முன் பல பிறவிகளிலும் செய்த பெரிய தவங்கள் பலவற்றின் பயனாலன்றி நம்பிகளது கழல்பரவும் பேறு வாய்க்கப் பெறாதென்பது.
செல்வத் திருமுருகன் பூண்டியினில் - வேடுவர் உருவொடு சிவகணங்கள் வந்து நிதி பறித்தது செல்வமின்மையாலன்று; தாமே மிக்க செல்வமுடையார் என்பது குறிப்பு; “வாங்கிப் பின் கொடுப்பதற்கோÓ (3912) என்று குறித்தல் காண்க.
வேடர் - வேடர் வடிவில் வந்த சிவகணங்கள்.
முற்றாத முலையுமையாள் - தல அம்மை பெயர். “ஏந்து பூண் முலைமங்கைÓ (பதிகம்).
கணமே - ஏகாரம் தேற்றம்; உடன் செல்ல - ஏந்தித் துணை போத.
மூடியா - அளவுபடாத; பெற்றார் - நம்பிகள்; வினையாலணையும் பெயர்.
தவம் - சாதி யொருமை.