அடிமுத லுபான மாதி யாகிய படைக ளெல்லாம் வடிவுறுந் தொழில்கண் முற்ற மனத்தினால் வகுத்து மான முடிவுறு சிகரந் தானு முன்னிய முழத்திற் கொண்டு நெடிதுநாள் கூடக் கோயி னிரம்பிட நினைவாற் செய்தார். | 7 | (இ-ள்) அடிமுதல்.....வகுத்து - அடி வரி முதல் உபான வரி முதலாக வரும் அடுக்குகள் எல்லாவற்றையும் சித்திர வேலைப்பாடுகள் திருந்த மனத்தினாலே அமைத்து; மானம்...கொண்டு - விமானத்தின் முடிவில் வரும் சிகரமும் விதித்த முழஅளவிற் கொண்டு; நெடிது நாள் ....செய்தார் - நீண்ட நாட்கள் செல்லக் கோயில் நிறைவுபட நினைப்பினாலே செய்தனர். (வி-ரை) அடி - அடிநிலை வரி; உபானம் - கோபுரத்தின் அடிக்கீழ் அமைக்கும் முதற் சித்திர வரி. ஆதியாகிய படைகள் - அடி உபானம் என்பன வாதியாகப் பெயர் வழங்கும் அடுக்கு வரிசைகள்; படை - அடுக்கு; படு - பகுதி; படுத்தல் - பொருந்த வைத்தல்; படவைப்பது படை. வடிவுறுத்தொழில்கள் - அவ்வப் படைக்கும் உரிய தொழில் வேலைப்பாட்டுத் திறம் பொருந்திய அழகு. மானம் முடிவுறு சிகரம் - விமானம் என்றது மானம் என நின்றது; விமானமும் சிகரமும் முடியும் அளவுகளை அவ்வக்கோயில் மூலமூர்த்திகளுக் கேற்றவாறு அளவுபடுத்தும் விதிகள் சிவாகமங்களி்ல் உண்டு; முடிவுறு என்றார் விமானப்பணி ஏனைய ஆலய அமைப்புப் பணிகள் நிரம்பியபின் இறுதியிற் செய்யப்படுதல் குறிக்க. சிகரம் - விமானத்தின் கூரிய உச்சியமைப்பு. முன்னிய முழம் - விதித்த முழ அளவு; முழம் - ஆலய சிற்பத்திற் கூறப்பட்ட அளவுள்ளது. கரமானம் - முழுஅளவு - 24 அங்குலம் என்பர். தேவாங்குலம் மானாங்குலம் என்னும் வகையுள் இங்குத் தேவாங்குலம் கொள்ளப்படும். முழம் - நீட்டலளவை. நெடிது நாள் கூட - ஆலயங்கள் அமைத்தலிற் படும் கால தாமத எல்லைக் குறிப்பு; பல நாள் செல்லும்படி. நினைவால் - நினைப்பினாலே; |
|
|