காடவர் கோமான் கச்சிக் கற்றளி யெடுத்து முற்ற மாடெலாஞ் சிவனுக் காகப் பெருஞ்செல்வம் வகுத்தல் செய்வான் நாடமா லறியா தாரைத் தாபிக்கு மந்நாண் முன்னாள் ஏடலர் கொன்றை வேய்ந்தா ரிரவிடைக் கனவி லெய்தி, | 9 | (இ-ள்) காடவர் கோமான்.......எடுத்து - காடவர் பெருமானாகிய பல்லவ அரசன் கச்சியம்பதியிலே கற்கோயில் எடுப்பித்து; முற்ற.....செய்வான் - முழுதும் பக்கமெல்லாம் சிவனுக்காகப் பெருஞ் செல்வங்களை நியமிக்கின்றவன்; நாட......முன்னாள் - திருமாலும் தேடியறிதற்கரியராகிய இறைவரைத் தாபித்தற்கு நியமித்த அற்றை நாளைக்கு முன்னாளிலே; ஏடலர்....எய்தி - இதழ்கள் விரிகின்ற கொன்றை மலர்களைச் சூடிய இறைவர் இரவினில் அவனது கனவில் தோன்றி; (வி-ரை) காடவர்.....எடுத்து - இந்தக் காடவர் - பல்லவ அரசராகிய இராச சிங்கர் என்றும், இந்தக் கற்றளி - கச்சியிற் சிறந்த கைலாயநாதர் கோயில் என்றும், இது சீகயிலாயத் திருக்கோயில் போன்ற அமைப்புக்களுடன் நிறுவப்பட்ட தென்றும் சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். கோமான் - கருத்தர். தாபிக்கும் அந்நாள் - கும்பாபிடேகம் செய்து பிரதிட்டை செய்தல் என்பர். சிவாகம விதிப்படி மந்திரம் பாவனை கிரியைகளால் சிவனை அங்கு மந்திரத்திருமேனியினின்றும் இலிங்கத் திருமேனியில் நிறுத்தல்; அந்நாள் - குறித்த நாள். அந்நாள் முன்னாள் - அந்நாளின் முந்திய நாளிலே; உருபு விரிக்க. மாடெலாம்.....பெருஞ்செல்வம் - பக்கங்களில் எல்லாம் விளைநிலம் முதலிய செல்வங்கள். மாடு - பக்கம்; செல்வங்கள் - பொருள். தமது பொருள்கள் எல்லாம் சிவனுக்காகும்படி என்றலுமாம். செய்வான் - செய்வானாகி; செய்வான் - தாபிக்கும் - என்று கூட்டுக. நாட....தாபிக்கும் - திருமாலுக்கும் தேட அறியாராயினும் அன்பர் விருப்பின் படி அங்குச் சிவலிங்கத் திருமேனியில் வெளிப்பட வீற்றிருக்கச் செய்யும் என்பது குறிப்பு. மோனை நயம்பற்றி ஆடமால் என்று கொண்டு அகந்தையால் அடிகாண்பன் என்று உரையாடியமையால் என்றும், அரவின் மீதாடியமால் என்றும் கூறுவாரு முண்டு. ஏடு - இதழ்; வேய்தல்: சூடுதல். கனவில் - அக்காடவர் கோமானது கனவில். |
|
|