பாடல் எண் :4184

தொண்டரைச் சென்று கண்ட மன்னவன் றொழுது “நீரிங்
கெண்டிசை யோரு மேத்த வெடுத்தவா லயந்தான் யாதிங்
கண்டர்நா யகரைத் தாபித் தருளுநா ளின்றென் றும்மைக்
கண்டடி பணிய வந்தேன் கண்ணுத லருள்பெற்Ó றென்றான்.
14
(இ-ள்) தொண்டரை.....தொழுது - சென்று அத்தொண்டர் பெருமானைக் கண்ட அரசர் அவரைத்தொழுது; நீர்.........யாது - தேவரீர் இவ்விடத்து எத்திசையார்களும் போற்றும்படி எடுத்த கோயில் எது?; இங்கு.......என்று - ஈண்டுத் தேவர் பெருமானாகிய சிவபெருமானை அத்திருக்கோயிலில் தாபித்தருளும் நாள் இன்று என்று தெரிந்து; உம்மை...பெற்று என்றான் - கண்ணுதற் பெருமானது திருவருளினால் அவ்வாற்றினைத் தெரிந்தவதனால் உம்மைக்கண்டு திருவடி தொழுவதற்கு வந்தேன் என்று சொன்னார்.
(வி-ரை) நீர் இங்கு.......அருள்பெற்று - என்றது அரசர் பூசலாரை நோக்கிக் கூறி வினாவியது.
எண்டிசையோரும் ஏத்த - இறைவர் இத்திருப்பணியினை ஏற்றருளுதல் அறிவிக்க அறிந்தானாதலின் எல்லாரும் பரவும் நிலைமையினது என்றான். தான் எடுத்த கோயில் போன்ற தொன்றெனக் கருதினான் என்றலுமொன்று.
இங்கு - ஏத்த - என்பது இந்நிலவுகில் வந்து துதிக்க என்றதாம்; இங்குத் தாபித்தருளும் - என்றது இவ்வூரில் கோயிலினுள் திருமேனியில் தாபித்தருளும், என்றதாம்.
கண்ணுத லருள்பெற்று - இறைவரது திருவருளால் அறிவிக்கப் பெற்று என்று தாம் அறிந்தவகையினை அந்நாயனாரது உயர்வு தோன்ற எடுத்துக் கூறியபடி.
யாது? - அடிபணிய வந்தேன் - என்பது யாது? என்று வினாவியதற்குக் காரணங் கூறியவாறு. யாது என்று வினாவியது வேறொரு காரணம் பற்றியதன்று என்பதாம்.
தாபித்தருளுதல் - பிரதிட்டை; ஒருசொல்.