அன்பரு மமைத்த சிந்தை யாலயத் தரனார் தம்மை் நன்பெரும் பொழுது சாரத் தாபித்து நலத்தி னோடும் பின்புபூ சனைக ளெல்லாம் பெருமையிற் பலநாட் பேணிப் பொன்புனை மன்று ளாடும் பொற்கழ னீழல் புக்கார். | 17 | (இ-ள்) அன்பரும்....தாபித்து - அன்பராகிய பூசலாரும் தாம் மனத்தினாலமைத்த ஆலயத்தில் சிவபெருமானை நல்ல பெரும்பொழுது வரத் தாபித்து; நலத்தினோடும்.....பேணி - நன்மையோடு அதன்பின்பு செய்ய வேண்டிய பூசனைகளையெல்லாம் பெருமையோடும் பல நாட்கள் விரும்பிச் செய்து வாழ்ந்து; பொன்புனை...புக்கார் - பொன்னாலியன்ற திருவம்பலத்தில் ஆடுகின்ற பொன்னடியின் நீழலை அடைந்தனர். (வி-ரை) அன்பரும் - அன்பர் செயல் கேட்ட அரசனும் மூதூர்ப்புக்கான் (4186); அரசனால் உலகறிய விளக்கம்பெற்ற அன்பரும் தாபித்துப் - பேணி - நீழல் புக்கார் என, உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. சிந்தை(யால் அமைத்த) ஆலயம் - என்க. சிந்தையினால் எனக் கருவிப் பொருளில் வரும் மூன்றனுருபு விரிக்க; சிந்தை - மனம் என்று கொண்டு, சிந்தையின்கண் அமைத்த என ஏழனுருபு விரித்தலுமாம். சிவபூசை (ஆன்மார்த்த பூசை) யில் அந்தரியாக பூசை (அகப்பூசை)யை முன்னே சிறப்பாகச் செய்யும்படி வரும் சிவாகம விதிகள் காணக். நன்பெரும் பொழுது - நல்ல வேளை; நற்பொழுது; பொழுது - ஓரை முதலிய காலப்பாகுபாடு; பெருமையாவது சிவனைத் தாபித்தற்குப் யன்பபட்ட நலம். பின்பு பூசனைகள் எல்லாம் - தாபித்ததன் பின்னர்ச் செய்யத்தக்க மண்டலாபிடேக பூசை, நித்திய பூசை முதலாயின; எல்லாம் - என்றதனால் நைமித்திக பூசையும் விழாவும் கொள்ளப்படும். பேணி - விரும்பிச் செய்து; பெருமையிற் பேணுதலாவது இறைவர் மகிழ்ந்தருளப் பெற்ற பெருமையினால் மேலும் மிக விரும்புதல். பொன்புனை மன்று- பொன்னம்பலம். பொற்கழல் நீழல் புக்கார் - திருவடி நிறைவுக்குள் அடங்கி நிற்றல் இங்குப் புகுதல் எனப்பட்டது. |
|
|