பாடல் எண் :4192

சீர்வளர் சிறப்பின்மிக்க செயன்முறை யொழுக்கங் குன்றா
நார்வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும்
பார்வளர் புகழின் மிக்க பழம்பதி மதிதோய் நெற்றிக்
கார்வளர் சிகர மாடக் காம்பீலி என்ப தாகும்.
1
(இ-ள்) சீர்வளர்....குன்றா - சீர்களை வளர்க்கும் தன்மை யுடைய சிறப்பின் மிக்க செயல்களின் முறைமையில் நல் ஒழுக்கம் குறையாத; நார் வளர்...நன்மையார் - அன்புமிக்க சிந்தையும் வாய்மையும் நன்மையும் மிக்கவர்கள்; மன்னிவாழும்.....பழம்பதி - நிலைபெற்று வாழ்தற்கிடமாகிய உலகில் ஓங்கிய புகழால் மிகுந்த பழம்பதியாவது; மதிதோய்......என்பதாகும் - சந்திரன் தவழ்கின்ற முகட்டினையும் மேகங்கள் தோயும் சிகரங்களையும் உடைய மாடங்கள் நிறைந்த காம்பீலி என்ற ஊராகும்.
(வி-ரை) சீர்வளர் - சீர் - சீர்த்தி; பெருமை. சீர்.......ஒழுக்கம் - உலகியல் பற்றிய ஒழுக்கங்களின் மிக்கனவாகிய உயிரினியல் பற்றிய ஒழுக்கம் என்பது குறிப்பு.
வளர் - செயல் என்று கூட்டுக. வளர்க்கும் தன்மையுடைய சிறந்த செயல்கள்.
சீர்வளர் - நன்மையார் - அப்பதியில் வாழும் குடிகளின் மேன்மைத் தன்மை யால் பதியின் சிறப்புக் கூறியவாறு.
சிந்தை - வாய்மை - நன்மையார் - மனம் வாக்குக் காயம் என்ற மூன்றானும் நலமிக்கவர்கள். நன்மை - செயன் முறை ஒழுக்கம். நார் -அன்பு. நன்மையார் - பெரியோர்கள்.
நெற்றி - முகடு; சிகரம் - சிறு தூபிகள்.
மதிதோய் - கார்வளர் - என்பன மாடங்களின் உயர்ச்சி குறித்தன.
காம்பீலி - பல்லாரிச் சில்லாவில் உள்ள தொரு நகரம். தலவிசேடம் பார்க்க.