பாடல் எண் :4193

அந்நக ரதனில் வாழ்வா ரறுவையர் குலத்து வந்தார்
மன்னிய தொழிலிற் றங்கண் மரபின்மேம் பாடு பெற்றார்
பன்னகா பரணற் கன்பர் பணிதலைக் கொண்டு பாதஞ்
சென்னியிற் கொண்டு போற்றுந் தேசிகார் நேச ரென்பார்.
2
(இ-ள்) அந்நகரதனில்........வந்தார் - அத்திருநகரத்தில் வாழ்கின்றவர்; அறுவையர் என்னும் சாலியர் குலத்தில் அவதரித்தவர்; மன்னிய...பெற்றார் - நிலைபெற்ற சீவனத் தொழிலில் தமது மரபில் மேன்மையுற்றனர்; பன்னகாபரணற்கு.....தேசிகனால் - பாம்பினை அணியாக அணிந்த சிவனுக்கு அன்பர்களா யுள்ளவர்களது பணியினைத் தலையாக மேற்கொண்டு அவர்களது திருப்பாதங்களைத் தலையிற் சூடிப் பணிந்து துதிக்கும் ஒளியினையுடையவர்; நேசரென்பார் - நேசரென்று சொல்லப்படுபவர்.
(வி-ரை) அறுவையர் குலம் - துணி செய்பவர் மரபு; அறுவை வாணிகர் மரபு என்பர்; தொகை நூல்களுள் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என்னும் சங்கப்புலவர் பெயர் காணப்படுகின்றது; அறுவை - தறியினின்றும் அறுத்தெடுப்பதனால், உடை, அறுவை எனப்படும்; துணித்தெடுப்பதால் துணியென்றும், வெட்டி எடுப்பதால் வேட்டி என்றும் இவ்வாறு காரணப் பெயர்கள் பலவும் காண்க.
மன்னிய....பெற்றார் - இஃது உலக நிலையில் அவரது குலத்தொழில் மேம்பாடு பற்றியது; திருநீலக்கண்டர், திருநாளைப்போவார், அதிபத்தர் முதலிய நாயன்மார்களது வரலாறுகளும் ஈண்டுச் சிந்திக்கற்பாலன. குலத்தொழிலில் மேம்பட்டு அத்தொழிலினைப்பற்றி நின்றே திருத்தொண்டின் மேன்மை யொழுக்கம் செலுத்திய சிறப்பும் காண்க.
பன்னகாபரணர் - சிவபெருமான்; பன்னகம் - பாம்பு; பாம்பினை அணியாகக் கொண்டவர்.
அன்பர் பணி தலைக்கொள்ளுதல் - அடியார்களது பணியினைச் சிரமாக மேற்கொண்டு செய்தல்; “அன்பர்பணி செய்யவெனை யாளாக்கி விட்டுவிட்டால், இன்பநிலை தானேவந் தெய்தும் பராபராமேÓ (தாயுமா).
பாதம் சென்னியிற் கொண்டு - அன்பர்களது திருவடியில் வணங்கி.
பணி தலைக்கொள்ளுதல் என்றதனால் மனத்தின் றொழிலும், சென்னியிற் கொண்டு என்றதனால் உடலின் றொழிலும், போற்றும் என்றதனால் வாக்கின்றொழிலும் ஆக முக்காரணங்களாலும் செய்யும் வழிபாடு கூறப்பட்டது. முன் பாட்டிற் கூறிய குறிப்பும் காண்க. மேல்வரும் பாட்டில் மேலும் விரித்தல் காண்க.
தேசினார் - அடியார் பணிகளை முட்டாமற் செய்வோர் பால் ஞானவொளி விளக்கமுண்டாம் என்பது; தேசினார் நேசர் - நேசர் என்ற சொற்பொருள் விரித்தபடி. தேசு - ஒளி - புகழ்; ஈண்டு அன்பு என்னும் பொருள் குறித்து நின்றது.