உடையோடு நல்ல கீளு மொப்பில்கோ வணமு நெய்து விடையவ ரடியார் வந்து வேண்டுமா றீயு மாற்றால் இடையறா தளித்து நாளு மவர்கழ லிறைஞ்சி யேத்தி அடைவுறு நலத்த ராகி யரனடி நீழல் சேர்ந்தார். | 4 | (இ-ள்) உடையொடு.......நெய்து - உடையினோடு நல்ல கீளினையும் ஒப்பில்லாத கோவணத்தினையும் நெய்து; விடையவர்......அளித்து - இடபத்தையுடைய இறைவரது அடியார்கள் வந்து வேண்டியவாறே கொடுக்கின்ற முறைப்படி இடையறாது கொடுத்து; நாளும்.....ஆகி - ஓவ்வொரு நாளும் அவர்களுடைய திருவடிகளை வணங்கித் துதித்து அடையும் நன்மையைப் பெற்றாராகி; அரனடி நீழல் சேர்ந்தார் - சிவபெருமானது திருவடிநீழலினை அடைந்தனர். (வி-ரை) நெய்து - நெய்வார் (ஆகி) - நெய்து - அளித்து என்று கூட்டுக. முன்னர் நெய்வார் என்ற முற்றெச்சம். மனவெழுச்சியினையும் தொழில் முயற்சியினையும் குறித்தது; இங்கு நெய்து என்றது தொழில் முற்றியநிலை குறித்தது. வேண்டுமாறு - வேண்டும்படியே; வேண்டியவாறே. ஈயுமாற்றினால் அளித்தல் - ஆறு - முறை; கொடுக்கும் வகையாவது மன நெகிழ்ச்சி, பணிவு, இன்சொல் முதலிய முறைமையுடன் ஈதல்; அவர் -அடியவர். அடைவுறும் நலம் - அறித்தலாலும், இறைஞ்சி ஏத்தலாலும் அடையும் நலம்; அடைவுறும் - அவர்களையே தமது தலைவர் என்றுட்கொண்டுசாரும் என்றலுமாம். அறியுமாற்றால் - என்பதும் பாடம். |
|
|