கற்றை வேணி முடியார்தங் கழல்சேர் வதற்குக் கலந்தவினை செற்ற நேசர் கழல்வணங்கிச் சிறப்பான் முன்னைப் பிறப்புணர்ந்து பெற்ற முயர்த்தார்க் காலயங்கள் பெருக வமைத்து மண்ணாண்ட கொற்ற வேந்தர் கோச்செங்கட் சோழர் பெருமை கூறுவாம். | 5 | (இ-ள்) கற்றை.....வணங்கி - கற்றையாகிய சடையினை முடியாகவுடைய இறைவரது திருவடிகளைச் சேர்தவற்காக முன் தம்மைக் கலந்திருந்த வினைச் சார்புகளை அறுத்த நேசநாயனாரது திருவடிகளை வணங்கி, அத்துணைகொண்டு, சிறப்பான் முன்னைப் பிறப்புணர்ந்து - தவமுதிர்வாகிய சிறப்பினாலே தமது முன்னைப் பிறப்பினை உணர்ந்து, அவ்வுணர்ச்சியுடனே வந்தவதரித்து; பெற்றம்.....வேந்தர் - இடபக்கொடியை உயர்த்திய சிவபெருமானுக்கு ஆலயங்கள் அனேகம் எடுத்து, மண்ணுலகம் காவல்பூண்ட அரசாட்சிசெய்து வெற்றியையுடைய வேந்தராகிய; கோச்செங்கட் சோழர்....கூறுவாம் - கோச்செங்கட் சோழரது பெருமையினைக் கூறத்தொடங்குகின்றோம். (வி-ரை) ஆசிரியர் தமது மரபின்படி இதுவரை கூறிவந்த சரிதத்தை வடித்து முடித்துக்காட்டி மேல்வரும் புராணத்துக்குத் தோற்றுவாய் செய்யும் வகையாலே அச்சரிதச் சுருக்கமும் அறிவிக்கின்றார். கழல் சேர்வதற்குச் - செற்ற - என்றுகூட்டுக; கழல் சேர்வதற்கு - சேர்வதன் பொருட்டு; வினை செற்ற திறம் அடியார்களித்து வழிபட்டதும், அரனை இடையறாது நினைந்து வந்ததும் ஆம். சிறப்பு - முன்னைத் தவ முதிர்ச்சி. முன்னைப் பிறப்புணர்ந்து - முன் பிறப்புணர்வுடனே பிறந்தனர் என்பது; மேலும் “அருளால் முன் உணர்ந்துÓ என்பது காண்க. முன்னுணர்தல் தவமுதிர்வாலும் திருவருளாலுமே வருவதாம். ஆலயங்கள் - பெருக - மேல் வரும் 4208 - 4211 பாட்டுக்களையும், ஆண்டுரைப் பவையும் பார்க்க. கொற்றம் - வெற்றி; தவத்தின்வெற்றியும் அரசரது வெற்றியுமாம். இவர்தென்னவனாயுலகாண்ட என்றபடி பாண்டிய நாட்டையும் ஆண்டனர் என்ற வரலாறுங்குறித்தது. பெருமை கூறுவாம் - சரிதம் கூறுவாம் என்னாது பெருமை என்றது, முன்னை நிலையும் இங்கு வந்த வரலாறும் என இரண்டு சரிதங்கள் ஒரு புராணத்துட் கூறவரும் இப்பெருமையும், ஆளுடைய பிள்ளையார் அரசுகள் நம்பிகள் முதலிய பரமாசாரியர்களாலும் போற்றப்படும் பெருமையும், வைணவ ஆசாரியர்களாகிய ஆழ்வாராதிகளும் போற்றும் பெருமையும் முதலிய அளவிறந்த பெருமைகளைக் குறிக்க. |
|
|