பாடல் எண் :4197

துலையிற் புறவி னிறையளித்த சோழ ருரிமைச் சோணாட்டில்
அலையிற் றரள மகிலொடுசந் தணிநீர்ப் பொன்னி மணிகொழிக்குங்
குலையிற் பெருகுஞ் சந்திரதீர்த் தத்தின் மருங்கு குளிர்சோலை
நிலையிற் பெருகுந் தருமிடைந்த நெடுந்தண் கான மொன்றுளதால்.
1
(இ-ள்) துலையில்.......சோணாட்டில் - துலைத்தட்டில் வைத்துப் புறாவின் எடைக்குச் சமமாகத் தனது உடற் றசையை நிறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி மரபில் வரும் சோழர்களுக்கு உரிமையாகிய சோழநாட்டில்; அலையில்...மருங்கு - அலைகளினால் முத்துக்களையும் அகிேலொடு சந்தனத்தையும் கொண்டுவரும் அழகிய நீரினையுடைய காவிரியாற்றின் மணிகளைக் கொழிக்குங் கரையில் பெருகுகின்ற சந்திர தீர்த்தத்தின் பக்கத்திலே; குளிர் சோலை....உளது - குளிர்ச்சியை யுடைய சோலைகளில் நிலையாக வளர்ந்தோங்குகின்ற மரங்கள் நெருங்கிய நீண்ட குளிர்ந்த கானம் ஒன்று உள்ளது; (ஆல் - அசை).
(வி-ரை) துலையிற் புறவின் நிறை அளித்த சோழர் - இது சிபிச்சக்கரவர்த்தியின் சரிதம் குறித்தது. சிபிச்சக்கரவர்த்தி ஒருகாலத்தில் சீகாழியில் அரியதொருயாகம் செய்திருந்தபோது அவரது பெருமையை உலகுக்கு அறிவிக்கத் திருவுளங்கொண்டு இறைவர் பணித்தருளியவாறு, தீக்கடவுள் ஒரு புறாகவும், இந்திரன் அதனைத் துரத்திவரும் பருந்தாகவும் உருவெடுத்துப் போந்து, புறா அவர்பால் அடைக்கலம் புக்கது; பருந்து தனக்கு இரை யென்று அதனைக் தன்னிடம் விடும்படி கேட்டது; சிபி அப்புறாவின் எடைக்கு ஈடாகத் தமது உடலின் தசையினை அரிந்து துலையிலிட்டனர். அது எடை குறையத் தாமே துலை எறி நிறைவு செய்து திருவருள் பெற்றனர் என்பது அச்சரித வரலாறு.
அடைக்கலம் புகுந்தாரைக் காக்கத் தன்னுயிரினையும் தரும் அறம்பற்றிச் சோழர் மரபின் பெருமை விளங்க நாட்டுச் சிறப்புக் கூறினார். ஈண்டு இப்புராணத்தினுள் அதனினும் மிக்கதாய்ச் சிவதருமங் காத்தற்பொருட்டு யானையினை ஒறுத்தல் காரணமாகத் தன்னுயிரினையும் தரும் கோச்செங்கட் சோழர் பெருமைக் குறிப்புப் படுதற்கு. “இவர் குலத்தோன் மேற்பறவை, மன்னுயிர்க்குத் தன்னுயிரை மாறாக வழங்கினனால்Ó (இராமா - குலமுறை - பட் 7) என்று, பிறரும் இப்பெருமையை எடுத்துக் கூறுதல் காண்க. சங்க நூல்களிலும் மற்றும் பல பெருநூல்களிலும் சிறப்பாக இச்சரிதம் போற்றப் பட்டுள்ளது.
நிறை - எடை சமமாகத் தமது தசையின் அளவு; துலை - தராசு; அலையில் தரளம் அகிலொடு சந்து அணி - அலைகளினால் முத்து அகில் சந்து இவற்றை வாரிவரும் அமைதியாகிய வெள்ளம்.
மணிகொழிக்கும் குலை - தரளம் அகில் சந்து இவற்றைக்கொண்டுவரினும், மணிகளைப் பக்கங்களிற் பெருக இறைத்துச் செல்வது; குலை - கரை.
சந்திரதீர்த்தம் - சந்திரன் தனக்குத் தக்க சாபத்தால் நேர்ந்த குறை நோயினைத் தீர்க்க இங்குத் தீர்த்தங் கண்டு வழிபட்டு நலனடைந்தான் என்பது தலவரலாறு. பெருகு - ஊற்றுமிகும்.
நிலையிற் பெருகும் - இருந்தவாறே பரவி வளரும்.
சந்திரகாந்தத்தின் - என்பதும் பாடம்.