பாடல் எண் :4199

ஆன செயலாற் “றிருவானைக் காÓ வென் றதற்குப் பெயராக
ஞான முடைய வொருசிலந்தி நம்பர் சொம்பொற் றிருமுடிமேற்
கானல் விரவுஞ் சருகுதிரா வண்ணங் கலந்த வாய்நூலான்
மேனற் றிருமேற் கட்டியென விரிந்து செறியப் புரிந்துளதால்.
3
(இ-ள்) ஆன......பெயராக - முன்கூறிய அவ்வாறாயின செயலினாலே அப்பதிக்குத் திருவானைக்கா என்று பெயர் ஆயினதாக; ஞானமுடைய ஒரு சிலந்தி - ஞானம்பொருந்திய ஒரு சிலந்திப்பூச்சி; நம்பர்......புரிந்துளது - இறைவரது செம்பொன் போன்ற திருமுடியின்மேல் சூரியவெப்பமும் சருகும் படாதபடி தன்னுட் கலந்த வாயின் நூலினாலே முடிமேல் கட்டும் நல்ல மேற்கட்டிபோல விரிவுடையதாய் நெருங்கச் செய்தது;( ஆல் -அசை)
(வி-ரை) ஆனசெயல் - முன்பாட்டிற் கூறிய அவ்வாறாயின செயல்.
ஆனைக்கா என்று பெயர் ஆக - ஆனை வழிபட்ட காரணத்தால் அப்பெயர் வழங்கியதாக.
ஞானமுடைய ஒரு சிலந்தி - ஞானம் - சிவன் பணிசெய்யும் ஞானம் - (அறிவு); இது முன்னைத் தவத்தால் - பூர்வ புண்ணியத்தால் - வந்த ஞானம்.
வாய்நூலால் - மேற்கட்டியென - சிலந்தி தன் வாய்நூலால் செறிவுள்ள பந்தல் போல இழைக்க. சருகு உதிராவண்ணம் - திருமுடியின் மேல் அங்குள்ள கானல் மரங்களின் சருகு உதிராதபடி காக்க.
கலந்த - சிலம்பியின் உடலுட் கலந்துவந்த, கலத்தலாவது உடம்பினுள்ளிருந்து வாய்வழி நூலாக வந்து பின்னரும் அதனை உள் ஒடுக்கிக்கொள்ளும் நிலைகுறித்தது.
திருமேற்கட்டி - திருமுடியின் மேலே கட்டும் விரிப்பு; இது பட்டு முதலியவற்றாலியல்வது; கட்டி - கட்டப்படுவது; பெயர்; விரிதல் - பரப்பு; செறிதல் - வாய்நூலினால் சருகுகள் புகாதபடி இடைவெளி சிறிதாய் அமைய.
சிலம்பி - கானில் - என்பனவும் பாடங்கள்.