பாடல் எண் :4201

“எம்பி ரான்றன் மேனியின்மேற் சருகு விழாமை யான்வருந்தி
இம்ப ரிழைத்த நூல்வலய மழிப்ப தேÓ யென் றுறுத்தெழுந்து
வெம்பிச் சிலம்பி துதிக்கையினிற் புக்குக் கடிப்ப, வேகத்தாற்
கும்ப யானை கைநிலத்தின் மோதிக் குலைந்து வீழ்ந்ததால்.
5
(இ-ள்) எம்பிரான்றன்.....என்று - எமது பெருமானது திருமேனியின் மேல் சருகுகள் விழாமைப் பொருட்டு நான் வருந்தி மேற்கட்டியாக இழைத்த நூல்வலயத்தினை இந்த யானை அழிப்பதா ? என்று; உருத்தெழுந்து.....கடிப்ப - மிகச்சினந்து எழுந்து மனம்புழுங்கி யானையினது துதிக்கையினுள்ளே புகுந்து கடிக்க; வேகத்தால்.....வீழ்ந்ததால் - அதன் குடைச்சலினாலே கையைத் தரையில் அடித்து மோதி நிலைகுலைந்து, வீழ்ந்து இறந்தது; (ஆல் - அசை).
(வி-ரை) எம்பிரான்றன்.....அழிப்பதே - இது யானையின் செயலைப்பற்றிச் சிலம்பி எண்ணியது. முதலில் கரம் சுலவிற்று என்று நல்ல எண்ணத்தையே கொண்ட சிலம்பி, மீள மீளச் செய்யக்காணலின் பகைமைச் செயலாகக் கண்டு சினந்தது.
உருத்து எழுந்து வெம்பி - சிலம்பியின் மிகச்சினந்த மனநிலை
துதிக்கையினிற் புக்குக் கடிப்ப - மிகச் சிறியோரும் மிகப் பெரியோரை நிலை குலையச் செய்யவல்லராகுவர் என்பதுண்மை.
வேகத்தால்.....குலைந்து - வீழ்ந்ததால் - துதிக்கையின் உட்புறம் மூளையின் அணிமையில் மிக நுட்பமான தசைகளையுடையது; அதில் விளைந்து ஊற்றின் துன்பம் பெரிதாகலானும், வேறு எவ்வழியானும் அதனைப் போக்கிக்கொள்ளுதல் யானைக்கு இயலாமையானும் கையைத் தரையில் மோதி நிலைகுலைந்து வீழ்ந்தது.
வீழ்ந்தது - வீழ்ந்திறந்தது; சிலம்பி - சுதைச்சிலம்பி போன்ற பெரும் சிலம்பிவகை. இது விடத்தன்மையுடைய தாதலின் இறப்பை விளைத்தது என்க.