தரையிற் புடைப்பக் கைபுக்க சிலம்பி தானு முயிர்நீங்க மறையிற் பொருளுந் தருமாற்றான் மதயா னைக்கும் வரங்கொடுத்து முறையிற் சிலம்பி தனைச்சோழர் குலத்து வந்த முன்னுதித்து நிறையிற் புவனங் காத்தளிக்க வருள்செய் தருள நிலத்தின்கண், | 6 | (இ-ள்) தரையில்.....நீங்க - முன்கூறியபடி நிலத்தில் மோதியதனாலே துதிக்கையினுள்ளே புகுந்த சிலம்பியும் இறக்க; மறையிற் பொருளும்......வரங்கொடுத்து - வேதங்களின் பொருயளாவார் அருள் தரும் முறையின்படி மதமுடைய அந்த யானைக்கும் ஏற்ற வரத்தினைக்கொடுத்து; முறையில்.....அருள் செய்தருள - முறைப்படி சிலம்பியினைச் சோழர் குலத்திலே முன்வந்து பிறந்து நிறுத்தும் முறைப்படி உலகங் காவல் செய்து அரசுபுரியும்படி அருள்புரியவும்; நிலத்தின்கண் - இந்நில உலகிலே. (வி-ரை) தரையிற் புடைப்ப - தரை - நிலம்; புடைப்ப - புடைத்ததனாலே எனக் காரணப்பொருளில் வந்தது. சிலம்பிதானும் உயிர்நீங்க - சிலம்பி தானும் - யானை வீழ்ந்திருந்ததனோடு சிலம்பியும் என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. மறையிற்பொருள் - வேதங்களின் பொருளாவார் இறைவர். தரும் ஆற்றல் - தருகின்ற முறையாலே; ஆறு - வழி; வரங்கொடுத்து - சிவபதம் கொடுத்து. பனைமரங்களும் சிவத்தை அடைந்த நிலை கருதுக (2581). நிறை - உலகை முறைசெய்து நிறுத்துதல். பொறுமை என்றலுமாம். |
|
|