பாடல் எண் :4203

தொன்மைதரு சோழர்குலத் தரசனாஞ் சுபதேவன்
தன்னுடைய பெருந்தேவி கமலவதி யுடன் சார்ந்து
மன்னுபுகழ்த் திருத்தில்லை மன்றாடு மலர்ப்பாதஞ்
சென்னியுறப் பணிந்தேத்தித் திருப்படிக்கீழ் வழிபடுநாள்.
7
(இ-ள்) தொன்மைதரு.......சார்ந்து - பழமையாய் வருகின்ற சோழர் குலத்தில் வந்த அரசனாகிய சுபதேவன் தனது பெருந்தேவி கமலவதியுடனே சார்ந்து; மன்னுபுகழ் ......விழிபடுநாள் - நிலைபெற்ற புகழினையுடைய திருத்தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடுகின்ற கமலமலர்போன்ற திருவடியினைத் தலையார வணங்கித் துதித்துத் திருப்படிக்கீழ் வழிபட்டுவருகின்ற நாளிலே.
(வி-ரை) தொன்மைதரு - பழைமையாகிய படைப்புக் காலமுதல் என்பர். பெருந்தேவி - பட்டத்தரசி.
திருப்படி - திருக்களிற்றுப்படி, பஞ்சக்கரப்படி,
திருவடிக்கீழ் - என்பதும் பாடம்.