பாடல் எண் :4207

தேவி புதல்வற் பெற்றிருக்கச் செங்கோற் சோழன் சுபதேவன்
ஆவி யனைய வரும்புதல்வன் றன்னை வளர்த்தங் கணிமகுடம்
மேவு முரிமை முடிகவித்துத் தானும் விரும்பு பெருந்தவத்தின்
தாவி னெறியைச் சென்றடைந்து தலைவர் சிவலோ கஞ்சார்ந்தான்.
11
(இ-ள்) தேவி.....இறக்க - தனது தேவியாகிய கமலவதி புதல்வனைப் பெற்று எடுத்த உடனே இறந்துவிட; செங்கோல் ...வளர்த்து - செங்கோற் சோழனாகிய சுபதேவன் தனது உயிரேபோன்ற அரிய புதல்வனை வளர்த்து; அங்கு...கவித்து - உரிய பிராயத்திலே அணிசெய்யப்பட்ட மகுடத்தினைப் பொருந்திய உரிமைப்படி முடியிற்சூட்டி அரசப்பட்டங் கொடுத்து; தானும்....அடைந்து - தானும் விரும்புகின்ற பெரிய தவஞ் செய்கின்ற குற்றமற்ற நெறியினைச் சென்று அடைந்திருந்து (பின்னர்); தலைவர்....சார்ந்தான் - இறைவரது சிவலோகத்தினைச் சார்ந்தனன். (வி-ரை) தேவி புதல்வற் பெற்றிருக்க - புதல்வரைப் பெற்றெடுத்தவுடன் முன்னை நிகழ்ச்சியால் நேர்ந்த உடற்பிணி காரணமாகத் தேவி இறந்தனள். பெற்றதும் இறந்ததும் உடனிகழ்ச்சிகளாக விரைவில் நேர்ந்தமை குறிக்க புதல்வற்பெற்றுத் தேவியிறக்க என்னாது, தேவி - புதல்வர்ப் பெற்று என்று மாற்றிவைத்தோதினார்.
சுபதேவன் - வளர்த்து - கோச்செங்கண்ணார் அன்னையின் அன்பார்ந்த வளர்ப்புப் பேறு பெறாது தந்தையாலே இயன்றவாறு வளர்க்கப்பட்டார் என்பதாம்.
ஆவி அனைய அரும்புதல்வன் - சுபதேவன் புதல்வரைத் தம் உயிரேபோற் பாதுகாத்தான் என்பது குறிப்பு.
உரிமை முடிகவித்து - உரிமைப்படி முடிசூட்டு விழாச் செய்து; முடிகவித்து என்றது சூட்டி என்ற அளவில் நின்றது; உரிமை - சோழமரபிற்கு உரிய முடிசூட்டு நிகழ்ச்சிகளை யெல்லாம் குறித்து நின்றது.
தானும் - தனது முந்தையோர் போலவே தானும் என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.
விரும்பு பெருந்தவம் - விரும்பு - தான் விரும்பிய - தனது பெரியோர் விரும்பிய - அறிவோர் விரும்பிய - என்று பலவாறும் உரைக்க நின்றது.
தானும்....அடைந்து - உரிய பருவத்தில் மகனை முடிசூட்டித் தந்தையர் தவஞ்சார்தல் நல்ல பழைய அரசமரபின் வழக்கு; ஐயடிகள் காடவர்கோனாயனார் வரலாறு “அரசாட்சி, யின்னலென விகழ்ந்ததனை யெழிற்குமரன் மேலிழிச்சிÓ (4048); கழறிற்றறிவார் வரலாறு “தரணி நீத்துத் தவஞ்சார்ந்தான்Ó (3757) முதலியவை பார்க்க. இங்கச் செங்கோற் பொறையன் என்னும் சேரலன் துறவு மேற்கொண்டு தனக்குப்பின் அரசபட்டம் நிகழ்வது பற்றிக் கவலாதே தவஞ்சார்ந்தனன் என்பது குறிக்கத்தக்கது. இஃது அம்மரபின் அந்நாள் உயர்நிலை. இராமன் கதையினுள் தசரதனும் இந்நெறியையே விரும்பியும் பெறாதொழிந்த வரலாறும் இங்கு நினைவு கூர்தற்பாலது. அடைந்து - அடைந்து தவஞ் செய்திருந்து பின்.
சார்ந்தான் - உலகச் சார்பாகிய அரசாட்சியினை முதலிற் சார்ந்து, அதன் துணையாலே, பின், அதனை விட்டுத் தவநெறி சார்ந்து, அத்துணையாலே முடிபிற் சார்தற்குரிய சிவலோகம் சார்ந்தனன். “சார்புணர்ந்து சார்புகெட வொழுகின்Ó என்ற திருக்குறட்பொருள் ஈண்டுக் கருதற்பாலது.