பாடல் எண் :4208

கோதை வேலார் கோச்செங்கட் சோழர் தாமிக் குவலயத்தில்
ஆதி மூர்த்தி யருளான்முன் னறிந்து பிறந்து மண்ணாள்வார்
பூத நாதன் றான்மகிழ்ந்து பொருந்தும் பெருந்தண் சிவாலயங்கள்
காத லோடும் பலவெடுக்குந் தொண்டு புரியுங் கடன்பூண்டார்.
12
(இ-ள்) கோதை வேலார்.....மண்ணாள்வார் - மாலையணிந்த வேலேந்திய கோச்செங்கட் சோழனார் இந்நிலவுலகில் ஆதிநாயகராகி சிவபெருமான் திருவருளினாலே தமது முன்னைப் பிறப்பின் நிலையினை அறிந்த நினைவுடனே பிறந்து இந்நிலவுலகினை அரசாள்வாராய்; பூதநாதன்....கடன் பூண்டார் - பூதநாதராகிய சிவபெருமான் தாம் மகிழ்ச்சி கொண்டு பொருந்தி வீற்றிருக்கும் பெரிய குளிர்ந்த சிவாலயங்கள் பலவற்றையும் பெருவிருப்புடன் எடுக்கின்ற திருத்தொண்டினைச் செய்யும் கடமையினை மேற்கொண்டனர்.
(வி-ரை) கோதை - மாலை. அவ்வரசர்க்குரிய அடையாளமாலை; வேலார் - வேல் - ஆயுதப் பொது; கோதை - வெற்றி மாலை என்றலுமாம். படைக்கலங்களுக்கும் மாலையணிவர். அவற்றில் தெய்வங்கள் உறைவர் என்பது கருத்து.
ஆதிமூர்த்தி...முன் அறிந்து - உலகில் தமது முன்னை நிலையின் நினைவுடன் யாரும் பிறப்பதரிது; இவர் சிவனருளால் முன்னை நினைவுடன் பிறந்தார்; குவல மத்தில் - அறிந்து பிறந்து - என்க
மண் ஆள்வார் - கடன்பூண்டார் - மண்ணாள்வார் - முற்றெச்சம். மண் ஆள்வாராகி. கடன் - கடமையாக மேற்கொண்ட நிலை; முன் அறிந்து பிறந்தமையால் இந்தக் கடன் பூண்டார் என்க. என்னை? முன்னைநிலையில் சிலந்தியாயிருந்துசிவன்றிரு மேனிமேற் சருகுவிழாமை நூல்வலய மிட்டுப் பந்தரிழைத்த செயல் சிவாலய அமைப்பாகும் ஆதலின் என்பதாம். சிலந்தியா யிருந்தபோது இயன்றவாறு அவ்வளவிற் செய்த அப்பணி நிறைய முற்றாமையால் அதனையே தொடர்ந்து இப்பிறவியில் - ஒன்றன்று - ஆலயங்கள் பலவும் வலிய மாடக்கோயில்களாகவே எடுத்தனர்.
காதலோடும் பல எடுக்கும் தொண்டு - ஆர்வமிகுதியினாலே (ஆராமையால்) பல கோயில்களை எடுத்தனர். இவர் எடுத்த மாடக் கோயில்கள் 78 என்பர். “ பெருங்கோயிலெழுபதி னோடெட்டும்Ó (அரசு - தாண்); வைணவ ஆழ்வார் கூறிய 70க்குப் பின் எடுத்தவை 8 கோயில்கள் போலும். இதனை வைணவப் பெரியார் போற்றியுள்ளார்.
பெருந்தண் சிவாலயம் - இவை பெருங்கோயில்கள் எனப்படும் மாடக் கோயில்கள் என்பதாம். அனைத்தையும் யானைபுகா மாடக் கோயில்களாக எடுத்தமைக்கும் முன்னறிந்த நினைவு காரணமென்ப. அஃதாவது யானையினால் தமது முன்னைநிலை வாய்நூற்பந்தர் நாளும் அழிக்கப்பட்டமையின் இனி அவ்வாறாகாது இக்கோயில்களனைத்தும் யானை உட் புகாதவாறமைந்த மாடக் கோயில்களாக எடுத்தனர் என்பர்.