பாடல் எண் :4209

ஆனைக் காவிற் றாமுன்ன மருள்பெற் றதனை யறிந்தங்கு
மானைத் தரித்த திருக்கரத்தார் மகிழுங் கோயில் செய்கின்றார்
ஞானச் சார்வாம் வெண்ணாவ லுடனே கூட நலஞ்சிறக்கப்
பானற் களத்துத் தம்பெருமா னமருங் கோயிற் பணிசமைத்தார்.
13
(இ-ள்) ஆனைக்காவில்.....அறிந்து - திருவானைக்காவில் தாம் முன்னை நிலையில் திரு அருள்பெற்ற அவ்வரலாற்றினை அறிந்தாராதலின்; அங்கு...செய்கின்றார் - அப்பதியில் மானை ஏந்திய திருக்கரத்தினையுடைய இறைவர் மகிழ்ந்தெழுந்தருளும் திருக்கோயிலைச் செய்கின்றாராகி; ஞானச்சார்வாம்.....கூட - மெய்ஞ்ஞானத்தின் சார்பினையுடைய வெண்ணாவல் மரத்தினுடனே பொருந்த; நலம்.....சமைத்தார் - நன்மை சிறந்தோங்க நீல மலர் போன்ற கழுத்தினையுடைய தமது இறைவர் வீற்றிருக்கும் திருக்கோயிற் பணியினைச் செய்தமைத்தனர்.
(வி-ரை) ஆனைக்காவில்....அறிந்து - திருவருளால் தமது முன் பிறப்பின் நிலையினை அறிந்து பிறந்தாராதலின் தாம் முன்பு திருவானைக்காவில் சிலந்தியாயிருந்து பணிசெய்து யானைப் பகையினை வென்று சோழனாக அவதரிக்கப் பெற்ற வரலாற்றினை அறிந்தார். அறிந்து - அறிந்தாராதலின்; காரணப் பொருளில் வந்த வினையெச்சம். (4199- 4202).
அங்கு - முன்னர்ச் சிலந்தியாயிருந்த நிலையில் தன்னாலியன்ற அளவு நூல்வலயமாகிய மேற்கட்டி யென இயற்றியது; இப்போது அரசராகிய நிலையில் இறைவர்க்கு முற்றிய இனிய கற்றிருப்பணியாக அப்பதியிலே இயற்றவேண்டும் என எண்ணிய நிலை குறிக்க அங்கு - என்றார்; அங்கு - அங்கேயே தேற்றேகாரம் விரக்க.
மகிழும் - மகிழ்ந்து வீற்றிருக்கும்; மகிழ்தலாவது மேற் மேற் சருகு விழாமையும், யானையால் பகை நேராமையும் பொருந்த யாவரும் கண்டு வணங்கி யினிதினருள் பெற உள்ள நிலை.
நலம்சிறக்க - முன்னிருந்த நிலையும் சிறப்புத்தான்; அதனினும் பெருகச் சிறப்பு ஓங்க.
அமர்தல் - விரும்பி வெளிப்பட வீற்றிருத்தல். செய்கின்றார் - செய்கின்ற அந்நாயனார்; வினையாலணையும் பெயர்.
ஞானச்சார்வாம் வெண்ணாவல் - இவ்வரலாறு முன் உரைக்கப்பட்டது; சம்பு முனிவரும் மற்றும் பல முனிவர்களும் இதன்கீழ்த் தவம் செய்த ஞானம்பெற்றமையும், இதன்கீழ் ஞானப்பயனாக இறைவர் வெளிப்பட்டு வீற்றிருத்தலும் குறிக்க ஞானச்சார்வாம் என்றார். “வெண்ணாவ லதன்கீழ் முன்னா ளரிதேடு மெய்ப்பூங்கழலார் வெளிப்படலும்Ó (4198.)
வெண்ணாவலுடனே கூட - கோயிற்பணி சமைத்தார் - வெண்ணாவல் மரத்தினையும், அதன் கீழ் அமரும் இறைவரையும் சேர்த்துக் காணத்தக்க ஒரு கோயிலாக அமைத்தார்; இப்பதியில் இன்றும் இறைவரது சந்நிதி வெண்ணாவல் மரத்தினடியில் ஒன்றாய்க் கண்டு வழிபட உள்ள நிலை கண்டு கொள்க.
ஞானச்சார்பு ஆம் - ஞானத்தினைச் சாரும் நிலை உளதாகும் தானமாகிய என்றதும் குறிப்பு. பானல் - அதன் பூவுக்கு முதலாகுபெயர்.
வெண்ணாவலுடனே கூட - தலமரமும் அதனடியே எழுந்தருளும் இறைவரும் கூட ஒன்றாகச் சேர்த்துக்கண்டு வழிபடுதல் வேண்டுமென்பது. இவ்வுண்மை யறியாது பல பதிகளில் தலமரங்களைக் கோயிற்பணியின் பொருட்டு அப்புறப்படுத்தி அமைவுகள் செய்தல் காணப்படும். அது வருந்தத்தக்கது. “கடம்பமர் காளை தாதைÓ என்பது முதலாக வரும் திருவாக்குக்கள் காண்க. தலமரங்களை எவ்வாற்றானும் சிதைத்தல், அப்புறப்படுத்தல் முதலியவை செய்யலாகாது. அது சிவாபராதமாகும்.