தேவர்பிரான் திருத்தொண்டிற் கோச்செங்கட் செம்பியர்கோன் பூவலயம் பொதுநீக்கி யாண்டருளிப் புவனியின்மேல் ஏவியநற் றொண்டுபுரிந் திமையவர்க ளடிபோற்ற மேவினார் திருத்தில்லை வேந்தர்திரு வடிநிழற்கீழ். | 17 | (இ-ள்) தேவர்பிரான்.....செம்பியர்கோன் - தேவர்பெருமானாராகிய சிவபிரானுடைய திருத்தொண்டினாலே கோச்செங்கட்சோழராக அவதரித்த செங்கண்ணார்; பூ.....புரிந்து - உலகம் பிறர்க்கும் பொது என்னாது தமக்கே சிறப்பாயுரியது என்று சொல்லும்படி தனியரசாட்சி புரிந்தருளி; புவனியின்மேல் ஏவிய நற்றொண்டு புரிந்து - இந்நிலவுகில் சிவபெருமான் அருள்செய்து செலுத்தியவாறு நல்ல சிவத்தொண்டுகளைச் செய்து; இமையவர்கள்.....கீழ் - தேவர்கள் வணங்கும்படி திருத்தில்லை நடராசரது திருவடி நிழலின்கீழ்ப் பொருந்தினார். (வி-ரை) திருத்தொண்டில் - முன் சிலந்தியாயிருந்து செய்த திருத்தொண்டின் பயனாலே; திருத்தொண்டுடனே ஆட்சியும் புரிந்து என்று கூட்டியுரைத்தனர் முன் உரைகாரர், ஆண்டருளி - ஏவிய நற்றொண்டு புரிந்து - ஆண்டருளுதலும் தொண்டுபுரிதலும் என்ற இரண்டும் சிவனேவல் வழியமைந்தவாறே புரிந்தருளினர். சிவனியக்கியவாறே ஆன்மாக்கள் இயங்குவன என்பது பொதுவுண்மையே யாயினும், அதனை அறிந்து திருவருளின் உணர்வினுள் அடங்கி நின்று ஒழுகுதல் இவருக்குச் சிறப்புரிமை என்க. இவருக்குச் சிவன் ஏவியருளிய நிலை, “முறையிற் சிலம்பிதனைச்சோழர் குலத்து வந்து முன்னுதித்து, நிறையிற் புவனங் காத்தளிக்க வருள்செய்தருளÓ (4202) என்றவிடத்துக் கூறப்பட்டது. ஏவிய - அடியார்கள் ஏவிய என்றலுமாம். பூவலயம் - வட்டமாகிய பூவுலம்; பூமி. பொதுநீக்கி - இவர் பாண்டிய நாட்டினையும் பிறநாடுகளையும் அரசு செலுத்திய சரிதக் குறிப்பு; “தென்னவனா யுலகாண்ட செங்கணார்Ó (தொகை); “நிம்ப நறுந் தொங்கல்Ó(வகை). இமையவர்கள் அடிபோற்ற - சிவத்தொண்டர்கள் தேவர்களும் பணியும் உயர்வுடையோர் என்பது. “தேவாசிரியன்.Ó |
|
|