பாடல் எண் :4214

கருநீல மிடற்றார் செய்ய கழலடி நீழல் சேர
வருநீர்மை யுடைய செங்கட் சோழர்தம் மலர்த்தாள் வாழ்த்தித்
தருநீர்மை யிசைகொள் யாழின் றலைவரா யுலக மேத்தும்
திருநீல கண்டப் பாணர் திறமினிச் செப்பலுற் றேன்.
18
(இ-ள்)கருநீல.........வாழ்த்தி - கரிய நீல மலர்போன்ற மிடற்றினையுடைய இறைவரது செம்மைதரும் கழலணிந்த திருவடி நீழல் சேரவரும் நீர்மையுடைய கோச்செங்கட் சோழரது மலர்போன்ற பாதங்களை வாழ்த்தி அத்துணைகொண்டு; தருநீர்மை...தலைவராய் - நீர்மைதரும் இசையினையுடைய யாழினது தலைவராய்; உலகமேத்தும்.......செப்பலுற்றேன் - உலகம் பரவும் திருநீலகண்ட யாழ்ப்பாணரது திறத்தினைஇனிச் சொல்லப்புகுகின்றேன்.
(வி-ரை) ஆசிரியர், தமது மரபின்படி இதுவரை கூறிவந்த சரிதத்தை முடித்துக்காட்டி, இனிக் கூறப்புகும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார்.
கருநீலம் - நீலமலர். கருமை - இயற்கை யடைமொழி. அடிநீழல் சேரவரும் நீர்மையுடைய - ஏனையோர்க்குப் போலக் கன்மம் புரிந்து பிறவி பெருக்கும் நிலையினன்றி, இவரது பிறவி திருத்தொண்டு செய்து திருவடி சார்தற் கென்றே இறைவராற் றரப்பட்ட தென்பதாம். வருதல் - பிறவியில் வருதல்; இதனால் ஆசிரியர் இவரது முற்பிற் சரித முழுதும் குறிப்பிற் பெறவைத்த சதுரப்பாடு கண்டுகொள்க. சேர - சேர்வதற்காகவே; நீர்மை - தன்மை; நீர்மையாவது இங்கு முன்னைத் தவமுதிர்ச்சியாகிய அன்பின் விளைவு.
நீர்மை தரும் இசை என்க. இங்கு நீர்மையாவது இனிய தன்மையும் இன்னிசையின் பயனுமாம்.
இசைகொள் - இசையினை விளைக்கும் தன்மை கொண்ட.
யாழின் தலைவர் - யாழிசைக் கலைவல்லமையில் முதல்வர்.