ஆலவா யமர்ந்தார் கோயில் வாயிலை யடைந்து நின்று பாலையீ ரேழு கோத்த பண்ணினிற் கருவி வீக்கிக் காலமா தரித்த பண்ணிற் கைபல முறையு மாராய்ந் தேலவார் குழலாள் பாகர் பாணிகள் யாழி லிட்டார். | 2 | (இ-ள்) ஆலவாய்.....நின்று - திருவாலவாயில் விரும்பி வீற்றிருக்கும் இறைவரது திருக்கோயிலின் வாயிலைச் சார்ந்து அங்கு நின்று; பாலை......வீக்கி - பாலையாய் நின்ற பதினான்கு வகையின் நிறுவிய உரிய பண் பெறும்படி கருவியின் நரம்புகளை முறுக்கி; காலம்.......ஆராய்ந்து - பண்கள் பலவற்றுள்ளும் அக்காதலத்துக்கிசைந்த பண்ணிலே வர நரம்புகளைக் கைவிரலின்றொழிலினால் பலமுறையினும் சோதித்துப் பண்ணமைதி கருவியினில் வரப்பெற்ற பின்னர்; ஏலவார்.....இட்டார் - மணமூட்டிய நீண்ட கூந்தலையுடைய உமையம்மையாரை ஒரு பாகத்தில் உடைய இறைவரது இசைக்கீதங்களை யாழில் இட்டனர். அமர்ந்தார் - விரும்பி வீற்றிருக்கின்ற சிவபெருமான்; வினையாலணையும் பெயர். (வி-ரை) பாலை....ஆராய்ந்து - பாடல், கண்டப்பாடல் என்றும் கருவிப்பாடல் என்றும் இருவகைப்படும். இவற்றுள் கண்டப்பாடல் உயிர்க்கிடனாம் கருவியாகிய உடற்பகுதிகளால், இயற்றப்படுதலாற் சிறப்புடையது. கருவிப்பாடல், உயிரற்ற கருவிகளாலியற்றப் படுதலின் அத்துணைச் சிறப்பில; அவை எந்த அளவுக்கு மிடற்றுப்பாடலுடன் ஒப்பிடவருமோ அந்த அளவுக்குச் சிறப்புடையன; அவ்வொற்றுமை பற்றித் தலைசிறந்த கருவிகள் குழலும் யாழுமாம்; இவ்விரண்டனுள்ளும் சொல்லையே ஒலிப்பதுபோன்ற தன்மையாற், குழல், மிகச் சிறந்தமையால் முன்வைக்கப்படும் இம்மூன்றனுள் கண்டப்பாடற் பாகுபாட்டமைதியினை முன்னர்த் தடுத்தாட்கொண்ட புராணத்துள்ளும் (221), குழற்கருவியின் அமைதியினை ஆனாய நாயனார் புராணத்துள்ளும் (938; 947 - 953) விரித்தருளினர். ஆண்டாண்டும், பிறாண்டும் (III - பக். 1223) உரைத்தவை யெல்லாம் இங்கு வைத்துக் கண்டுகொள்க. குழற்கருவிக் குரைத்த தன்மைகள் எல்லாம் பெரும்பாலும் யாழ்க்கருவிக்கும் ஒக்கும். அவற்றுள் யாழ்ப் பண் அமைதிபற்றிச் சிறப்பாயறியப்படும் ஒருசில பண்புகளை மட்டும் ஈண்டச் சுருக்கி ஆசிரியர் எடுத்துக் கூறியருளுகின்றார்; அத்தன்மைகளுள் கருவி வீக்குதலும் கை பலமுறையு மாராய்தலும் குழலுக்கின்றி, யாழுக்குச் சிறப்பாயுரியனவாதலின் ஈண்டு எடுத்துக் கூறப்படுதல் கண்டு கொள்க. பாலை ஈரேழு கோத்த பண்ணினில் - பாலை - ஆயம், சதுரம், திரிகோணம், வட்டம் என்று நான்கு வகைப்படும்; அவற்றுள், பாலையாழ் , குறிஞ்சியாழ், மருதயாழ், நெய்தல்யாழ், என்ற நான்குவகைப் பண்களும் பிறக்கும்; பாலையா முள்ளே செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை என்ற ஏழு பாலையிசைகளும் பிறக்கும்; அவைவரன்முறை, இடமுறை எனத் திரிபுவகையால் இருதிறப்படும்; அவற்றுள் பல பண்களும் பிறக்கும்; ஆயப்பாலையாய் நின்ற பதினாற்கோவையி னிறுவிய செம்பாலை முதலிய இவ்வேழினையும் பாலையீரேழு என்பர். இங்குப் பண் என்றது ஆயப்பாலையை. பண்ணினிற் கருவி வீக்கி - யாழிலிட நினைந்த பண்ணுக்கு இணை, கிளை, பகை, நட்பு ஆகிய நரம்புகளை அறிந்து வீக்கி; இதனைக் கலைத்தொழில்கள் எட்டனுள் பண்ணல் என்பர். கை பலமுறையும் ஆராய்ந்து - முன்கூறிய அவ்வாறு வீக்கின நரம்பை, அகவிரல் புற விரல்களால் கரணம் செய்து தடவிப்பார்த்தல் பரிவட்டணையாம்; ஆரோகண - அவரோகண (ஏற்றல் - இறக்குதல்) வகையால் இசையினைத் தெரிதல் ஆராய்தலாம்; அநுசுருதி யேற்றல் தைவரல் எனப்படும்; இவற்றோடு வார்தல் முதலிய எட்டுவகை யிசைக் காணங்களையும் இயற்றி என்க. இசைக் கரணங்கள் எட்டாவன; வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்பன; வார்தலாவது - சுட்டுவிரலாற் றொழில் செய்தல்; வடித்தலாவது - சுட்டுவிரலும் பெருவிரலும் கூட்டி நரம்பை உள்ளும் புறமும் ஆராய்தல்; உந்தலாவது - நரம்புகளைத் தெறித்து வலிவும் மெலிவும் நிரலும் அறிதல்; உறழ்தலாவது - ஒன்றிடையிட்டும் இரண்டிடையிட்டும் நரம்புகளைத் தெறித்தல்; உருட்டல் - நான்குவகை; இடக்கைச் சுட்டுவிரலுருட்டல், வலக்கைச் சுட்டுவிரலுருட்டல் என்பன; தெருட்டலாவது - திருந்திய நரம்பை மிகவுந் தொட்டுத் திருகிவிடுதல்; அள்ளலாவது - சுட்டுவிரலாலும் பெருவிரலாலும் அள்ளுதல்; பட்டடையாவது - நரம்பு முற்றும் விளிமுறையாற் பற்றி எழுப்புதல். இன்னும் இவற்றின் விரிவெல்லாம் இசைநூல்களுள்ளும், சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை - கானல்வரி - அடியார்க்கு நல்லாருரை, முதலியவற்றுட் கண்டு கொள்க. கூர்ம புராணம் கண்ணன் மணம்புணர்ந்த அத்தியாயமும் காண்க. மேற்கூறியவை பெரும்பாலும் சிலப்பதிகார உரையைத் தழுவி எழுதப்பட்டன. காலம் ஆதரித்த பண் - பாடும் நேரத்துக்கும் காலத்துக்கும் உரிய பண்; பகல் இரவு - யாமம் - பெரும்பொழுது முதலிய காலக் கூறுபாடு பற்றி உரிய பண்கள் வகுக்கப்படும்; இப்பண்பு இந்நாளில் கைவிடப்பட்டு வருகின்றமை வருந்தத் தக்கது! ஏலம் - மயிர்ச்சாந்து; “ஏல வார்குழ லாளுமை நங்கைÓ (நம்பி) பாணிகள் - இசைப்பாட்டுக்கள்; கீதங்கள்; பாணனார் யாழினொடு பொருந்த மிடற்றுப்பாடலும் பாடினர் என்பது மேல் அறியப்படுதலால் (பாடுகின்றார் (4218); பாடக் கேட்டு 4219) அதற்குரிய பாட்டின் பகுதியில், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்ற நான்கு அமைதிகளும் மிடற்றும் பாடற் பகுதியில் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம் என்ற ஐந்தும் நிகழ்தல் முதலிய இலக்கணமெல்லாம் மேற்கொள்ளப்படும். இவைபற்றி முன் உரைத்தவை எல்லாம் ஈண்டு நினைவு சர்தற்பாலன பணிகள் யாழில் இருதலாவது - கீதங்களின் சொல்லமைதி யாழ் இசையில் வெளிப்பட இயற்றுதல் |
|
|