மற்றவர் கருவிப் பாடன் மதுரைநீ டால வாயிற் கொள்ளவன் றிருவுள் ளத்துக் கொண்டுதன் றொண்டர்க் கெல்லாம். அற்றைநாட் கனவி லேவ, வருட்பெரும் பாண னாரைத் தெற்றினார் புரங்கள் செற்றார் திருமுன்பு கொண்டு புக்கார். | 3 | (இ-ள்) மற்றவர்.......கொண்டு - மற்று அவரது (பாணனாரது) யாழ்க்கருவியிலிடப்பட்ட பாடலினை மதுரையில் நீடுகின்ற திருவாலவாயில் எழுந்தருளியுள்ள சௌந்திரபாண்டியராகிய அரசர் தமது திருவுள்ளத்துக் கொண்டருளி; தன்....ஏவ - தமது திருத்தொண்டர்களுக் கெல்லாம் அன்று கனாவிலே தோன்றி ஏவியபடியினாலே; அருட்பெரும்....புக்கார் - (அவ்வடியார்கள் மறுநாள்) சிவனருளைப் பெற்ற பெரும் பாணனாரைப் பகைவர்களது புரங்களை அழித்த இறைவரது திருமுன்பிலே கொண்டு புகுந்தனர். (வி-ரை) மற்று அவர் - மற்று - உட்புகுந்து முன்பு பாடவேண்டிய நிலையிலிருந்தும், அவ்வாறு இல்லாது புறவாயிலின் நின்று பாடிய அவர் என்ற குறிப்புடன் நின்றது. கருவிப்பாடல் - யாழ்ப்பாட்டு; திருவுள்ளத்துக்கொண்டு - திருவுளத்தில் விரும்பியமையால்; கனவில் - கனவில் தோன்றி; ஏவ - அவரைத் திருமுன்பு கொண்டு புகும்படி ஏவ; அருள் - திரு அருளுக்கிலக்காகி அதனை நிரம்பப் பெற்ற. தெற்றினார் - பகைவர். வினையாலணையும் பெயர். பெரும்பாணனார் - பாணர், பெரும்பாணர் சிறு பாணர் என்று இருவகையினர்; இப்பகுப்பு அவர்களது யாழின் தன்மை பற்றியது. பெரும்பாணற்றுப்படை - சிறுபாணாற்றுப்படை என்பன காண்க. “பெரும்பாணராவார்குழலர் பாணர் முதலிய பெரிய இசைக்காரர்Ó (அடியார்க்). ஏவ - திருமுன்பு கொண்டு புக்கார் - நாயன்மார்கள் காலத்தில் சாதி முறை இருந்ததென்றும், அதனைப் போக்கும் அன்புநெறியில் அவர்கள் ஒழுகினர் என்றும், பாணர் மரபினர் கோயிலுக்குள் செல்லலாகாது என்ற பொல்லா விதியை உடைக்க இங்கு ஆண்டவன் திருவுள்ளம் பற்றினன் என்றும், திருக்கோயிலில் தீண்டாமை பாராட்டுவோர் ஆண்டவன் றிருவுள்ளக் குறிப்புக்கு மாறுபட்டு நடப்பவரே யாவர் என்றும், பிறவாறும், ஈண்டு விசேட ஆராய்ச்சி உரைகண்டு குறிப்பிடுவாருமுண்டு; சாதிமுறை, தீண்டாமை முதலியவற்றின் உண்மை நிலைபற்றி முன் பல விடங்களிலும், சிறப்பாகத் திருநாளைப்போவார் நாயனார் புராணத்துள்ளும், பிறாண்டும் விரித்துரைக்கப்பட்டன. கடைப்பிடிக்க. ஈண்டுத் திருநீலகண்டப் பாணனாரைத் திருமுன்கொணர இறைவர் தொண்டர்க் கெல்லாம் கனவில் ஏவினாரே யன்றி, அவரது மரபினர் எல்லாரையும் திருமுன்னர்க் கொண்டு புக ஏவியருளினாரல்லர்; அவ்வாறே திருநாளைப் போவார் நாயனாரை மட்டில் எரியின்கண் மாயப்பிறப்பினை ஒழித்து வரும்படி ஏவினாரன்றி அம்மரபினர்கள் பிறரைப்பற்றி ஏவுதல் இல்லை. இவ்வாறு அவ்வவர்க்குச் செய்த அருள் அவ்வவர் நிலைபற்றிய தன்றி அவர்தம் மரபுபற்றிய தன்று என்பது வெளிப்படை. இவர்கள் தன்மைபற்றி அங்கங்கும் தனித்தனி ஏவியருளிய நிலையினால் சாதிமுறை ஒழுக்கவிதிகள் திருவுள்ளக் குறிப்புக்கடுத்த தென்பதே முடிவாகும். ஒழுக்க அறநூல்கள் இறைவர் வருத்தவையேயாம். அவ்வப்போது நிகழும் அரசியலாற்றின் சமூகநிலைகள் பற்றி எழும் கருத்துக்களை அறநூல் ஒழுக்க விதிகளுள்ளும் சமயநிலை விதிகளுள்ளும் புகுத்தி யிடர்ப்படுதல் வேண்டாத காரியம் என்க. ஈண்டு யாழ்ப் பெரும்பாணனாரை அவரது தன்மைபற்றி, முன்பு, ஆளுடைய பிள்ளையார் சீகாழிப்பதியில் புறத்திரு முன்றிலினுள் அழைத்துச்சென்று அங்கு நின்று யாழியற்ற அருள்புரிந்தருளினர். இங்குத் திருவாலவாயினுள்ளும் பாணனார் தாம் கோயில் வாயிலினின்று யாழியற்றினர்; இறைவர் ஏவத் தொண்டர்கள் அவரைத் திருமுன்பு கொண்டு புக்கனர். பின்னர்த் திருவாரூரில் கோயில்வாயில் முன்அடைந்து யாழியற்றிப்பாட, வடதிசையில் வாயில் வேறு வகுப்பப் புகுந்து வணங்கும் நிலையும் காணப்படும் (4222). இவற்றின் நுட்பங்கள் ஆராயத்தக்கன; இங்கும், உட்புக்கது இறைவர் பணியாம் என்று தமக்கும் மெய்யுணர்தலாலே பாணனார், திரு முன்பிருந்து பாடினர் (4218) என்பதும் கருதுக. |
|
|