அன்பர்கள் கொண்டு புக்க பொழுதினி லரிவை பாகன் றன்பெரும் பணியா மென்று தமக்குமெய் யுணர்ந்த லாலே மன்பெரும் பாண னாரு மாமறை பாட வல்லார் முன்பிருந் தியாழிற் கூடன் முதல்வரைப் பாடு கின்றார். | 4 | (இ-ள்) அன்பர்கள்.....பொழுதினில் - அன்புடைய அடியவர் முன்கூறியவாறு கொண்டு திருமுன்பு புகுந்தபோது; அரிவைபாகன்.....உணர்தலாலே - உமையம்மைபங்கராகிய இறைவரது பெரிய ஆணையே யாகும் இஃது என்று தமக்கும் உணர்வினுள்ளே உண்மை புலப்படப் பெற்றமையினாலே; மன்.....பாடுகின்றார் - நிலைபெற்ற பெரிய யாழ்ப்பாணனாரும் பெரிய வேதங்களைப் பாடவல்லாராகிய திருவாலவாயுடையாரது திருமுன்பு இருந்துகொண்டு, அக்கூடலாலவாய் முதல்வரைப் பாடுகின்றாராகி; (வி-ரை) புக்க - திருமுன்பு புகவைத்த; பணி - கட்டளை. அரிவை பாகன்.....உணர்தலாலே - இஃது இறைவரது கட்டளையேயாம் என்று அன்பர்கள் அறுவுறுத்தி அழைத்துக் கொண்டு புக்கதேயன்றித் தமது உணர்வினுள்ளும் இறைவரது திரு அருளினாலே உணர்த்தப்பெற்று உணர்ந்தபடியினாலே; மெய் - உண்மைத் தன்மை. தமது மரபின் நிலை ஒழுக்கின்படி திருவாயிலின் நின்றபடி பாடுகின்ற பாணனார் அவ்வொழுக்கம் இறைவரது கட்டளையாயினவாறே, இச்செயலும் இறைவரது கட்டளையாமென்று அடியவர்கள் சொல்லக் கேட்கும் திருவருள் உணர்த்தவும் உணர்ந்தனர். ஆதலின் மரபொழுக்க நிலையினைத் தாண்டித் திருமுன்பு இருந்து பாட ஒருப்பட்டனர் என்பதாம். அரிவைபாகன் - ஈண்டு அருளுடைமைக் குறிப்பு. மாமறை பாடவல்லார் - இறைவர்; முன்பு - திருக்கோயிலினுள் நேர்திருமுன்பில். யாழிற் பாடுகின்றார் - யாழியற்றி அதனுள், பாட்டின் சொல்லிசை யமைதிவரப் பாடுகின்றாராகி; பாடுகின்றார் - முற்றெச்சம்; பாடுகின்ற பாட்டின் பொருள் மேல்வரும் பாட்டில் கூறுதல் காண்க. பாடுகின்றார் - பாடக்கேட்டு - என வரும் பாட்டுடன் முடிக்க. பாடவல்லார்முன் - பாடுகின்றார் என்பது அணிநயம். கூடல் முதல்வரை - பாட்டின் பொருளாவார் கூடனாயகர் என்பது. |
|
|