பாடல் எண் :4219

திரிபுர மெரித்த வாறுந் தேர்மிசை நின்ற வாறுங்
கரியினை யுரித்த வாறுங் காமனைக் காய்ந்த வாறும்
அரியயற் கரிய வாறு மடியவர்க் கெளிய வாறும்
பரிவினாற் பாடக் கேட்டுப் பரமனா ரருளி னாலே,
5
(இ-ள்) வெளிப்படை; முப்புரங்களையும் எரித்த பண்பினையும், (அதன்பொருட்டுத்) தேரின் மீதுநின்ற தன்மையினையும், யானையை, உரித்த வரலாற்றினையும், மன்மதனைக் காய்ந்த நிலையினையும், திருமாலுக்கும் பிரமதேவனுக்கும் அறிதற்கரியராயின வரலாற்றினையும், (ஆயினும்) அடியவர்களுக்கு எளியராயுள்ள ஆற்றினையும்; அன்பினாலே பாடக் கேட்டு இறைவனாரது திருவருளினாலே;
(வி-ரை) இப்பாட்டினால் இறைவரைப் பாணனார் யாழியற்றிப் பாடியபாட்டின் பொருள் கூறப்பட்டது.
திரிபுரமெரித்த...எளியவாறும் - இவை பாணனார் பாடிய பாடற்பொருள்கள். இறைவரது அருட் செயல்களையும், அவற்றாற் போந்த திருவருட் பண்புகளையும் பொருளாக் கொண்டன என்பதாம்.
திரிபுரமெரித்த.........காய்ந்தவாறும் இவை இறைவர் செய்த வீரங்கள்; “அயன்றலை கொண்டுசெண் டாடல் பாடி யருக்க னெயிறு பறித்தல் பாடி, கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக் காலனைக் காலா லுதைத்தல் பாடி, யியைந்தன முப்புரமெய்தல் பாடி யேழை யடியோமை யுரண்டு கொண்ட, நயந்தனைப் பாடிநின் றாடி யாடி நாதற்குச் சுண்ண மிடித்து நாமேÓ (திருவா - திருப்பொற். 18) என்பது முதலாகிய திருவாக்குக்கள் ஈண்டு நினைவுகூர்ந்து ஒப்புநோக்கற்பாலன; தேர் - பூமியாகிய தேர்.
அடியவர்க் கெளியவாறும் - இறைவர் செய்த அரும்பெரும் வீரங்கள் எல்லாம் அவர் அடியவர்க் கெளிவந்த அருளையே உட்பொருளாக உடையன என்பது.
கேட்டுப் பரமனமார் செய்த அருளினாலே, எழுந்த ஓசை......என - என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடித்துக் கொள்க.
கேட்ட - என்பதும் பாடம்.