அந்தரத் தெழுந்த வோசை “யன்பினிற் பாணர் பாடுஞ் சந்தயாழ் தரையிற் சீதந் தாக்கில்வீக் கழியுÓ மென்று “சுந்தரப் பலகை முன்னீ ரிடுÓ மெனத் தொண்ட ரிட்டார்; செந்தமிழ்ப் பாண னாருந் திருவருள் பெற்றுச் சேர்ந்தார். | 6 | (இ-ள்) அந்தரத்து எழுந்த ஓசை - ஆகாயத்தில் எழுந்த ஓசை யானது; அன்பினில்........என - அன்பினாலே பாணனார் பாடுகின்ற சந்தத்தினையுடைய யாழானது தரையில் உள்ள சீதந்தாக்கினால் நரம்புகளின் இறுக்கம் சிதையுமாதலின் அழகிய பலகையினை முன்னர் நீங்கள் இடுங்கள் என்று கூற; தொண்டர் இட்டார் - தொண்டர்கள் அவ்வாறே பலகை இட்டார்கள்; செந்தமிழ்.....சேர்ந்தார் - செந்தமிழ்ப் பாணனாரும் திருவருளினைப் பெற்று அதனில் இருந்தனர். (வி-ரை) அந்தரம் - வானம். ஆகாயம் - மேலிடம்; ஓசை.....என - என்க. என - என்று கூற; என்று ஆணையிட் டறிவிக்க. சந்தயாழ் - இசைநூல் விதிப்படி உரிய பக்குவமுடைய மரத்தினால் அமைந்த யாழ். சந்தம் - சந்தத்தினை எழுப்பும் தன்மை பொருந்திய; தட்பவெப்ப நிலைகளின் சமனாக அமைந்தபோதே மரத்தினின்றும் சங்கம் ஒழுங்குபடக் கிளம்பும் என்பது. சந்தம் - பெருமை - புகழ் - என்றலுமாம். தரையிற் சீதம்தாக்கில் வீக்கழியும் என்று - தரையிலிருந்து பாடுகின்றாராதலின் யாழும் தரையில் வைக்கப்பட்டதாம்; தரையினுடைய குளிர்ச்சி பாணனாரது கை விரல்களின் மூலமும், யாழின் மரத்தண்டு உடல் இவற்றின் மூலமும் தாக்க நரம்புகளின் முறுக்கு அழியும்; நரம்புகள் என்பது தொக்கு நின்றது; வீக்கு - இறுக்கம்; முறுக்கு; அழிதல் - முறுக்க மதிகமாதலும் இளகுதலும் குறித்தது. சுந்தரப்பலகை - பொற்பலகை; பலகையிடும் என - பலகையிட்ட திருவிளையாடல் வரலாறு பார்க்க. “தார முய்த்தது பாணர்க் கருளொடேÓ என்ற பிள்ளையார் தேவாரத் திருவாக்கும், அதற்குத் “திருவிய மகத்தி னுள்ளும் திருநீல கண்டப் பாணர்க் கருளிய திறமும் போற்றிÓ (2769) என்று ஆசிரியர் உரைவிரித்தருளியதும் இங்கு நினைவுகூர்தற்பாலன. செந்தமிழ்ப் பாணனார் - செந்தமிழ்ப் பாடல்களைக் கருவியிலும் கண்டத்திலும் பாடும் பாணனார்; தமிழ்ப்பாடல்களையே யன்றி ஏனைய மொழிப் பாடல்களை யாழியற்றும் நிலை தமிழ்நாட்டில் அந்நாள்வரை வழக்கில் இல்லை என்பது கருதப்படும்; அப்படி இருந்தமை பெறப்படின், அவற்றைப் பொருள் எனக் கருதாது ஒதுக்கிச் சிறப்பு நோக்கித் தமிழ்ப் பாட்டுக்களையே பாடும் என்றுரைத்துக்கொள்க; பாணனார் ஆளுடைய பிள்ளையாரது செந்தமிழ்ச் திருப்பாடல்களையே யாழியற்றி உடனிருந்த வரலாறுங்கருதுக. கழியுமின்று - என்பதும் பாடம். |
|
|