பாடல் எண் :4221

தமனியப் பலகை யேறித் தந்திரிக் கருவி வாசித்
துமையொரு பாகர் வண்மை புலகெலா மறிய வேந்தி,
யிமையவர் போற்ற வேகி யெண்ணிறா னங்கள் கும்பிட்
டமரர்நா டாளா தாரூ ராண்டவ ராரூர் சேர்ந்தார்.
7
(இ-ள்) தமனியப்பலகை.......வாசித்து - பொற்பலகையின்மேல் ஏறியிருந்து யாழினை வாசித்து; உமை.......அறிய - உமையம்மையை ஒருபாகத்தில் உடைய இறைவரது வள்ளன்மையினை உலகமெலாம் அறியும்படிக்கும் ஏத்தி போற்றும்படிக்கும்; இமைவர்.....ஏகி - தேவர்களும் ஏத்த அங்கு நின்றும் சென்று; எண்ணில்.......கும்பிட்டு - அளவற்ற பதிகளைக் கும்பிட்டுச் சென்று; அமரர்நாடு......சேர்ந்தார் - தேவருலகத்தின் ஆட்சியை விட்டு வந்து திருவாரூரினை ஆட்சிபுரிகின்ற தியாகேசப் பெருமானார் எழுந்தருளிய திருவாரூரினைச் சேர்ந்தனர்.
(வி-ரை) தமனியப் பலகை - பொன் வேலைப்பாடுகளமைந்த பலகை; தமனியம் - பொன்; ஏறி - ஏறி யமர்ந்து; தந்திரிக்கருவி - யாழ்; தந்திரி - நரம்பு; வண்மை - வினைக்கீடாக இறைவனாணையால் வரும் சாதி ஆயுப் போகம் என்ற ஒழுக்க நியமத்தின்படி, வாய்தலில் நிற்கத்தக்க தம்மை அதனைக் கடந்து திருமுன்பு புகுத்திப் பாடலியற்றச் செய்த திருவருள், வண்மை எனப்பட்டது. “நம்மையுமோர் பொருளாக்கி நாய்சிவிகை யேற்றுவித்த, அம்மையெனக் கருளியவா றார் பெறுவா ரச்சோவேÓ (திருவா) என்று பாராட்டுதல் “வண்மை யுலகெலா மறிய வேத்திÓ எனப்பட்டது; வாய்மை - என்பது பாடமாயின் அதற்குத்தக வுரைத்துக் கொள்க.
இமயவர் போற்றல் - அடியவர்க் கெளியதாம் திருவருள் கண்டு துதித்தல்.
எண்ணில் தானங்கள் கும்பிட்டு - தானங்கள் - சிவன் வெளிப்பட்டு விளங்கும் பதிகள். இவை, திருவாலவாயினின்று திருவாரூர் செல்லும் வழியிலும் மருங்கிலும் உள்ளவை; தானங்கள் கும்பிட்டு - என்றதனால் பாணனார் தமது மரபு ஒழுக்கின்படி வாயிற்புறத்து நின்று பாடிய நிலையும், பதிகளையே வணங்கிச் சென்ற நிலையும் கருதப்படும்.
அமரர் நாடு.....ஆண்டவர் - “அமரர்நா டாளாதே யாரூ ராண்ட, வயிராவணமேÓ (தேவா) என்ற திருவாக்கினை மேற்கொண்டு ஆண்டருளியது; அமரர்நாடா ளாதே - தியாகேசர், இந்திரனாற் றேவருலகிற் கொண்டு வைக்கப்பட்டு, அங்கு அமரர்களால் வழிபடப்பட்டிருந்த நிலையினை விட்டு, முசுகுந்தச் சக்கரவர்த்திக் கருளி, அவர்மூலம் இந்நிலவுலகில் திருவாரூரில் எழுந்தருளியுள்ள வரலாற்றுக் குறிப்பு. கந்த புராணம் பார்க்க.
வண்மை - அருளிப்பாடுகளை.