ஆழி சூழந் திருத்தோணி யமர்ந்த வம்மா னருளாலே யாழின் மொழியா ளுமைஞான மூட்ட வுண்ட வெம்பெருமான் காழி நாடன் கவுணியர்கோன் கமல பாதம் வணங்குதற்கு வாழி மறையோர் புகலியினில் வந்தார் சந்த யாழ்ப்பாணர். | 10 | (இ-ள்) ஆழி......உண்ட - கடலாற் சூழப்பட்ட திருத்தோணியிலே விரும்பி எழுந்தருளிய இறைவரது திருவருளினாலே யாழிசையினும் இனிய மொழியாளராகிய உமையம்மையார் ஞானவமுத மூட்ட வுண்டருளிய; எம்பெருமான்.....வணங்குதற்கு - எமது பெருமானும், சீகாழி நாடுடையவரும், கவுணியர் தலைவரும் ஆகிய ஆளுடைய பிள்ளையாரது தாமரைபோன்ற திருவடிகளை வணங்கும் பொருட்டு; வாழி.....யாப்பாணர் - வாழ்வுடைய மறையவர்களது பதியாகிய சீகாழிப்பதியினில் சந்தமுடைய யாழ்ப்பாணனார் வந்தனர். (வி-ரை) ஆழிசூழம் திருத்தோணி - ஊழி வெள்ளத்தில் மிதத்தால் ஆழிசூழம் என்றார். யாழின் மொழியாள் - யாழினும் இனிய மொழியாளாகிய; “யாழைப் பழித்தன்ன மொழி மங்கைÓ (நம்பி - தேவா - மறைக்காடு). அம்மான் அருளாலே - உமையாள் - ஊட்ட - “துணைமுலைகள், பொழிகின்ற பாலடிசில் பொன்வள்ளத் தூட்டென்னÓ (1964) என முன்கூறிய வரலாறுகள் நினைவுகூர்க. ஞானம் - சிவஞானவமுதம் குழைத்த திருமுலைப்பால்; ஞானம் - ஞானங் குழைத்த பாலுக்காகி வந்தது ஆகுபெயர். எம்பெருமான் - எமது பரமாசாரியர். வணங்குதற்கு - திருவாலவாயினிலும் திருவாரூரினிலும் இறைவரது கோயில் பணியச் சென்றனர். இங்கு ஆளுடைய பிள்ளையாரது திருவடிகளை வணங்குதல் குறித்து வந்தனர். மறையோர் புகலியினில் - மறையவர்கள் பதியாகிய புகலியினில்; பிள்ளையாரது திருவடிகளை வணங்குதற்காகவன்றி அங்குப்பாணனார் அணுக்கமாய் வருதற்கியைபில்லை என்பது குறிப்பு. திருநாளைப்போவார் நாயனார் வரலாறு பார்க்க. |
|
|