பாடல் எண் :4228

ஒழியாப் பெருமைச் சடையனா ருரிமைச் செல்வத் திருமனையார்
அழியாப் புரங்க ளெய்தழித்தா ராண்ட நம்பி தனைப்பயந்தார்
இழியாக் குலத்தி னிசைஞானிப் பிராட்டி யாரை யென்சிறுபுன்
மொழியாற் புகழ முடியுமோ முடியா தெவர்க்கு முடியாதால்.
1
(இ-ள்) ஒழியா.......திருமனையார் - குறைவில்லாத பெருமையினை யுடைய சடைய நாயனாரது செல்வம் பொருந்திய திருமனைவியாரும்; அழியா....பயந்தார் - வேறெவ்வாற்றானும் அழியாத வலிமையுடைய முப்புரங்களை எய்து அழித்தவராகிய சிவபெருமான் ஆண்டருளிய நம்பியாரூரரைப் பெற்றவரும் ஆகிய; இழியா.....பிராட்டியாரை - இழிவில்லாத உயர்வுடைய குலமாகிய சிவவேதியரது குலத்தின் வந்த இசைஞானிப் பிராட்டியாரை; என் சிறுபுன்.....முடியாது - எனது சிறிய புன் மொழிகளாற் புகழ முடியுமோ? எனக்கு முடியாமையேயன்றி வேறு எவருக்கும் முடியாது. (ஆல் -அசை)
(வி-ரை) ஒழியாப் பெருமை - அளவில்லாத பெருமைகளை உடைய. நீங்காத என்றலுமாம்.
செல்வம் - அருட்செல்வம்; சிவச்செல்வம். உரிமை - இல்லற உரிமைக்குரிய.
அழியா.......அழித்தார் - அழியா - வேறெவராலும் எவ்வாற்றாலும் அழிக்கலாகாத.
இழியாக்குலம் - சிவவேதியர் மரபு; குலத்தின் இழிவாவது - பிரமதேவனுடைய படைப்பினுட்பட்டுப் பிறந்திறந்து உழலும் கீழ்மை; இழியாக்குலம் - அவ்விழிபுக் கிடமின்றிச் சிவனது சிருட்டியுட் பட்டுச், சிவ னைம்முகங்களின் வழித் தோன்றி, அவ்வழிவழி அதிகரித்துச் சிவாகமப்படி சிவனை அருச்சித்தலையே தமது மரபுரிமையாகக் கொண்டொழுகும் குலம். “இழியாக் குலத்திற் பிறந்தோ மும்மை யிகழா தேத்துவோம்Ó (நம்பி - தேவா - திருவாரூர் - செந்துருத்தி - 8); “எப்போது மினியபிரா னின்னருளா லதிகரித்துÓ (4160) “மாதொரு பாக னார்க்கு வழிவழி யடிமை செய்யும் வேதியர் குலம் Ó (149); “மாசிலா மரபில் வந்த வள்ளல்Ó (186) என்பன முதலியவை காண்க. பயந்தார் - “பயந்தாள்Ó என்பது வகைநூல். பயந்தார் - தென்றமிழ்ப் பயனாயுள்ள திருத்தொண்டத் தொகை தரும் நம்பியைத் தந்தனர் என்பது குறிப்பு. பயன் - பயம்; இழியாக்குலம் - சிவன்படைப்பில் வந்தமை குறிப்பு; “தானெனை முன்படைத்தான்Ó (நம்பி).
ஆண்ட - தடுத்தாட் கொண்டருளிய; பயந்தாரும் இழியாக்குலத்தில் வந்தவருமாகிய இசை ஞானிப் பிராட்டியாரை என்க.
என்.......முடியுமோ? - புகழ்தல் எனது சிறு சொல்லளவிற் படுமோ? படாது. என்றபடி. எவர்க்கும் - எனக்கேயன்றி மற்று எவருக்கும் என்று இறந்தது தழுவிய எச்சவும்மை.
சரிதச்சுருக்கம் - இசைஞானியம்மையார் புராணம் ;- இசைஞானி யம்மையார் உலவாத பெருமையினை யுடைய சடைய நாயனாரது உரிமைத் திருமனைவியார்; சைவ முதல்வராகிய ஆளுடைய நம்பிகளைப் பெற்ற பெருமையினை உடையவர்; திருவாரூர் இறைவரது திருவடிகளை என்றும் மறவாத மனமுடையவர். அவரது புகழ்களைக் கூறுதல் எவராலும் இயலாது.
கற்பனை :- (1) நன்மக்கட்பேறு இல்லறத்தின் நன்கலமாம்.
(2) தமது இல்லறத்துக்கே யன்றி உலகமெல்லாம் உய்யச் செய்யவல்ல மகனாரைப் பெறுதல் தாயர்செய்த பெருந்தவமும் புகழுமாம்.
(3) அவ்வாறு பெற்ற தாயரைப் புகழ்தல் எவர்க்குமரிது.