ஆர முரக மணிந்தபிரா னன்ப ரணுக்க வன்றொண்டர் ஈர மதுவார் மலர்ச்சோலை யெழிலா ரூரி லிருக்குநாட் சேரர் பெருமா டனைநினைந்து தெய்வப் பெருமாள் கழல்வணங்கிச் சாரன் மலைநா டணைவதற்குத் தவிரா விருப்பி னுடன்போந்தார். | 3 | (இ-ள்) ஆரம்...வன்றொண்டர் - பாம்பினை ஆராமாக அணிந்த இறைவரது அன்பராகிய அணுக்கமுடைய வன்றொண்டர்; ஈர...நாள் - குளிர்ந்த தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த அழகிய திருவாரூரில் இருக்கும் நாட்களில்; சேரர்பெருமாள்...வணங்கி - சேரமான் பெருமாள் நாயனாரை நினைந்து தெய்வப்பெருமாளாகிய தியாகேசரை வணங்கி அருள் விடை பெற்று; சாரல்....போந்தார் - சாரல்களையுடைய மலைநாட்டினை அணைவதற்குத் தடுக்கலாகாத பெருவிருப்பத்துடனே போயினார். (வி-ரை) உரகம் ஆரம் அணிந்த - என்க. உரகம் - பாம்பு. அணுக்க வன்றொண்டர் - அணுக்கராய்ப் பணி செய்யும் உரிமையுடைய நம்பிகள். அணுக்கப் பணிகளாவன - நீறும் மாலையும் சாத்துதல், திருமஞ்சன மாட்டுதல் முதலிய திருமேனிப்பாங்குகள் செய்தல். முப்போதுந்திருமேனி தீண்டும் மரபினராதல் குறிப்பு. நம்பிகளது முன்னை நிலைக்குறிப்பும் காண்க. இனி இறைவரருளுக்கு அணியராய்த் தோழமையாகிய உரிமையுடையர் என்றலுமாம். ஈரம்....எழிலாரூரில் இருக்குநாள் - நினைந்து - அடைமொழிகள் திரு ஆரூரின் பண்புகளையும், அதில் இருப்போர் அதனை விட்டு நீங்க மனங்கொள்வதரிதாம் நிலைமையினையும் உணர்த்தி நின்றன; முன்னர் நம்பிகள் சேரமானாரால் உபசரிக்கப்பட்டு அவருடன் கொடுங்கோளூரில் இருந்தநாளில் திருவாரூர் நகராளும் தேவர் பிரானைமிக நினைந்து பாடி வழிக்கொண்டார்; (3903 - 3910); இங்குத் திருவாரூலில் இருக்குநாளில் சேரமானாரை நினைந்து செல்கின்றார்; இவை திருவருள்வழி இயங்கு நிலைகள் என்க. பிற்சரிதவிளைவும் கருதுக. தெய்வப் பெருமாள் கழல்வணங்கி என்றும் தவிரா விருப்பினுடன் என்றும் வருவன இக்குறிப்புத் தருவன. இறைவர் தாமே தோழமையருளத் தம்பிரான் றோழராகிய நம்பிகள், தம்மைச் சேரமான் றோழராக அமைத்துக் கொண்டருளியமையாலும் சேரனாரது தோழமை தெய்வந்தர வந்தமையாலும் ஈரிடத்திலும் ஒக்கவே நம்பிகளது ஆர்வம் சென்றது என்பதும் கருதப்படும். சேரர் பெருமாள் - தெய்வப்பெருமாள் என்று ஈரிடத்தும் ஒப்பக்கூறும் குறிப்பும் கருதுக. ஆரம்...கழல் வணங்கி - திருவாரூரையும் தியாகேசரையும் புற்றிடங்கொண்டாரையும் வணங்கிச் செல்லும் நிலை இதுவே இறுதிமுறையாதல் குறிப்பு. ஆளுடைய பிள்ளையார் திருமணத்துக்கு எழுந்தருளும்போது “மூலமான தோணிமேல் முதல் வரை வணங்கிÓச் (3094) சென்றருளினர் என்பதும் காண்க. சாரல் - மலைநாட்டிற் பெய்யும் மழைச்சாரல்களும் அதனால் வரும் ஏனைய தாவரச்சார்புகளும் கொண்ட என்பது. தவிரா விருப்பு - தடுக்கலாகாத பெருவிருப்பம். சேரர் பெருமை - என்பதும் பாடம். |
|
|