பாடல் எண் :4232

நன்னீர்ப் பொன்னித் திருநாட்டு நாதர் மகிழுந் திருப்பதிகள்
முன்னி இறைஞ்சி யகன்றுபோய்முல்லைப்படப்பைக் கொல்லைமான்
துன்னி யுகைக்குங் குடக்கொங்கி லணைந்து தூய மதிவானீர்
சென்னி மிசைவைத் தவர்செல்வத் திருப்புக்கொளியூர்சென்றடைந்தார்.
4
(இ-ள்) நன்னீர்...போய் - நல்ல நீரையுடைய காவிரித்திருநாடாகிய சோழ நாட்டிலே இறைவர் மகிழ்ந்தெழுந்தருளும் திருப்பதிகளை நினைந்தும் வணங்கியும் நீங்கிச்சென்று; முல்லை...அணைந்து - முல்லை நிலச்சார்புடைய புறவங்களில் தோட்டங்களில் மான்கள் துள்ளி ஆடுதற்கிடமாகிய மேல் கொங்கு நாட்டில் சேர்ந்து; தூய...அடைந்தார் - தூய மதியினையும் கங்கையினையும் சிரத்தில் வைத்த இறைவரது செல்வ நிறைந்த திருப்புக்கொளியூரினைச் சென்று அடைந்தனர்.
(வி-ரை) நன்னீர் - ஒருதுளி யளவும் வீணாகாது பயிர்களுக்கும் உயிர்களுக்கும் பயன்படும் நிலையும், இருகரையிலும் பதிகளை வணங்கி வழிபட்டுச் சென்று எல்லா உயிர்களும் சிவனை வழிபட்டுய்யச் சாதனமாயிருக்கும் நிலையும் குறிப்பு. முன்னி இறைஞ்சி - நினைந்தும் நேரே வணங்கியும் என்று எண் உம்மை விரிக்க; வழியிடைப் பட்ட பதிகளை இறைஞ்சியும், அவ்வாறு படாதவற்றை நினைந்தும் சென்றார் என்பதாம்.
முல்லைப்படப்பை - குடக்கொங்கில் அணைந்து - காவிரிசூழும் சோழநாட்டையகன்று, காவிரியைக் கடந்து, கீழ்கொங்கு நாட்டை நீங்கி, மேல்கொங்கு நாட்டினை அணைந்தனர் என்பதாம்; இவ்வழிகள் முன் சேரனாருடன் செல்லும் போது கூறியமையால் இங்குக் கூறினாரிலர்; (3876 - 3888); முல்லைப்படப்பை - முல்லைப்புறவு நிலம்; மலைநாட்டினை அணுகுமுன் உள்ள காடுகளடர்ந்த நாட்டுப்பரப்பு. “குன்றுங்கானு முடைக்குறும்ப ரிடங்க டோறுங் குறைவறுப்பத், துன்று முரம்புங் கான்யாறுந் துறுகற் சுரமும் பலகடந்துÓ (3798) என்று முன் இதனைக் கூறியது காண்க.
கொல்லைமான் துன்னி உகைக்கும் - முல்லைப் புறவுகளைக்கடந்து அந்நிலத்தின் ஊர்களை அணுகச் செல்லும் இடங்களின் பண்பு; காட்டின்றன்மையும் நாடு நகரங்களின் தன்மையும் கலந்த பகுதிகள்; காடாரம்பமாகிய இந்நிலைகள் இங்கு இன்றும் காண உள்ளன.
குடக்கொங்கு - மேல்கொங்கு. கீழ்கொங்கு, வடகொங்கு, மேல்கொங்கு என்று கொங்குநாடு மூன்று பிரிவுகளையுடையது; அவற்றுள் மேல்கொங்குநாடு; சோணாட்டிலிருந்து வரும் வழியில் இதனைக் கடந்து மலைநாட்டினை அணைதல் வேண்டும். இதனை “மீகொங்குÓ (மீ - மேல்) என்பது தேவாரம். “மீகொங்கி லணிகாஞ்சிவாய்ப் பேரூர்Ó (நம்பி); இது பற்றி முன் (3242) உரைத்தவையும் பார்க்க.
தூயமதி - இறைவரை அடைந்தமையாற் றூய்மை பெற்ற மதி. அப்பிராகிருத சந்திரன் என்றும் கூறுவர். “ஞானசந்திர கலான்விதம்Ó என்பர்.
திருப்புக்கொளியூர் - இப்பதி திருப்புக்கொளியூர் அவிநாசி என வழங்குவது. பதிகம் பார்க்க. அவிநாசி என்றே உலகில் விளங்க வழங்கப்படும். புக்கொளியூர் - பெயர்க்காரணம்பற்றித் தலவிசேடம் பார்க்க.
செல்வம் - அருட் செல்வம்; தல அம்மை, கருணாம்பிகை என்று வழங்கப்படும் காரணப் பெயருடையராதலும் குறிப்பு.