மறையோர் வாழு மப்பதியின் மாட வீதி மருங்கணைவார் நிறையுஞ் செல்வத் தெதிர்மனைக ளிரண்டி, நிகழ்மங் கலவியங்கள் அறையு மொலியொன் றினி,லொன்றி லழுகையொலி, வந்தெழுதலு, மாங் குறையு மறையோர் களை, “யிரண்டு முடனே நிகழ்வ தென்?Óனென்றார். | 5 | (இ-ள்) மறையோர்...அணைவார் - அப்பதியில் வேதியர்கள் வாழும் மாடவீதியின் பக்கத்தில் அணைவாராகிய நம்பிகள்; நிறையும்...இரண்டில் - நிறையும் செல்வத்துடன் எதிர் எதிராயமைந்த இரண்டுமனைகளில்; நிகழ்....எழுதலும் - ஒரு மனையில் நிகழும் மங்கலத் தொழில்களுக்கான இயங்களின் ஒலியும், மற்றொன்றில் அழுகை ஒலியும் வந்து எழுதலும் (அவற்றைக் கேட்டு); ஆங்கு.....என்றார் - அங்கு உறைகின்ற வேதியர்களை நோக்கி, மாறுபட்ட இவ்விரண்டு ஒலிகளும் ஒரே காலத்தில் நிகழ்வதற்கு என்ன காரணம்? என்று கேட்டருளினார். (வி-ரை) இத்திருப்பாட்டும், மேல்வரும் பாட்டும் கதை சொல்லும் உரைநடைப் போக்கில் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் கொண்ட செம்பாகமான இனிய நடையில் அமைந்துள்ளமை கண்டுகளிக்கத்தக்கது. இவ்வாறு நேர்நின்று பேசுதல்போலச் சரிதம் கூறிப்போதல் ஆசிரியரின் சிறப்பான கவி அருமைப்பாடுகளுள் ஒன்று. ஆளுடையபிள்ளையார் புராணத்துள் திருமருகல் நிகழ்ச்சி கூறும் பாட்டுக்களையும் பார்க்க. இதனை ஆங்கிலத்தில் சரிதம் கூறல் - Narration - என்றதொரு அழகு என வகுப்பார். அப்பதியில் மறையோர் வாழும் மாடவீதி - என்க. அப்பதி சேய்ஞலூர் முதலியவைபோல் முற்றும் மறையவர் பதியன்றாதல் கருதி இவ்வாறுரைக்கப்பட்டது. இவ்வீதி, இப்போது தெற்கில் வஞ்சிப்பாளையம் என்ற இருப்புப்பாதை நிலையத்தினின்றும், அவிநாசிக்கு வரும் வழியில் அமைந்திருந்தது; புக்கொளியூர் என்னும் நகரம் திருக்கோயிலுக்குத் தென்புறம் பாசனக்குளத்தின் தெற்கில் அமைந்த நிலப்பரப்பில் இருந்ததென்பதும், பின்னர்க் காலாந்தரத்தில் அழிந்துபட்டதென்பதும், நாட்டு நடப்புச் சரித ஆதரவுகளாலும், அரசாங்க நிலக்கணக்குப் பதிவு முதலியவற்றாலும் அறியப்படுகின்றன. நகரமிருந்து அழிந்துபட்ட அடையாளங்கள் இப்போது இந்நிலப்பரப்பிற் காணலாம்; “புக்கொளியூர் மடம்Ó என்ற பழயது ஒரு அறநிலயமும், பெயர் வழக்கும் இதற்குச் சான்று பகர்கின்றன. இவ்வழியாய் வரும்போது தான் நம்பிகள் இப்பாட்டிற் கூறியவாறு நிகழ்ச்சிகளைக் கண்டு கேட்டனர் என்பது கருதப்படுகின்றது. சோழநாட்டினின்றும் மலைநாட்டுக்குச் செல்வோர் திருவீங்கோய்மலை அருகு காவிரியைத் தாண்டித், திருப்பாண்டிக் கொடுமுடியின் வழியேவந்து, திருமுருகன்பூண்டி திருப்புக்கொளியூர் வழியாக மேற்கு நோக்கிச் செல்லும் ஒரு பழஞ்சாலை வழி முன்னாளில் இருந்தது என்பதும் அறியப்படும். இதுபற்றி, முன், “காரூரு மலைநாடு கடந்தருளிக் கற்சுரமு, நீரூருங் கான்யாறு நெடுங்கானும் பலகழியச், சீரூ____________________ 1 இதுபற்றி எனது சேக்கிழார் பக்கங்கள் 143 - 146 பார்க்க.ருந் திருமுருகன் பூண்டிவழிச் செல்கின்றார்Ó (3911) என்றதும், ஆண்டுரைத்தவையும் இங்கு நினைவு கூர்தற்பாலன. (இப்போது நகரம் கோயிலுக்கு வடக்கில் உள்ளது. காலாந்தரத்தின் மாறுதல்.) இவ்வீதியினைக் கடந்து சென்றால் முதலை பிள்ளையை உண்ட மடு என்னும் ஏரியும், அதனைக்கடந்து சென்றால் திருக்கோயிலும் அடைய உள்ளன. பழைய இந்நிலைகளை மனம் கொண்டாலன்றி மேல்வரும் சரித நிகழ்ச்சிகள் (4237 - 4238) அமைவுபடா. நிறையும் செல்வத்து எதிர் மனைகள் இரண்டில் - அவ்வீதியில் எதிர் எதிராக இரண்டு செல்வமனைகள் ஒன்று போன்ற செழிப்புடன் விளங்க அவற்றுள். நிகழ்மங்கல....எழுதலும் - இருமனைகளும் ஒன்றுபோலச் செல்வமுடன் விளங்க, அவற்றுள் அவ் வொரு காலத்தில் நிகழ்ச்சிகள் மாறுபட்டன என்க; இவ்வாறு தோற்றமும் நிகழ்ச்சியும் மாறுபாடு படக் கண்டநிலை நம்பிகள் அவற்றைத் திருவுளங் கொள்ளக் காரணமாயிற்று; ஆயின் சிவானந்தப் பெருவாழ்விற் றிளைத்தவாறே சிவயோக வாழ்வுடன் உலகில் பரமே பார்த்திருக்கும் எந்தம் பெருமக்கள் இவ்வாறு வரும் உலக நிகழ்ச்சிகளில் மனம் செலுத்துவரோ? எனின், அற்றன்று; பின் விளைவு கருதித் திருவருள் இவர்களது திருவுள்ளத்துள் நின்று இவ்வாறு செலுத்தியருளும் என்பதாம்; திருமருகலில் கும்பிடச் சென்ற ஆளுடைய பிள்ளையார் வழியில் வணிகப் பெண்ணின் அழுகை கேட்டுச் சென்று வினவி அருள்புரிந்த வரலாறும் ஆண்டுரைத்தவையும் இங்கு நினைவுகூர்தற்பாலன; அவ்வரலாற்றிற் போலவே, இங்கும், மகவிழந்த மறையோனும் மனைவியும் சிறந்த சிவத்தொண்டர்களெனவும், நம்பிகள்பால் மிக்க அன்புபூண்டடொழுகியவர்கள் எனவும் “முன்னே கண்டிறைஞ்ச - வந்துÓ (4235) “முன்னே வணங்க முயல்கின்றோம்; அன்பு பழுதாகாம லெழுந்தருளப் பெற்றோம்Ó (4236) என்றவற்றால் ஆசிரியர் அறிவிக்கும் திறமும் காண்க. திருவருள் நிறைவுபெற்ற பெரியோர் செய்கையும் திருவருள் செலுத்துமாறுகளையும் அளக்க எவரே வல்லார்? மங்கலவியங்கள் அறையும் ஒலி ஒன்றில்; ஒன்றில் அழுகை ஒலி - ஒலிகளின் வேறுபாட்டையும் மாறுபாட்டையும் குறிக்க, “ஒன்றில் ஒன்றில்Ó என்ற சொற்களை இடையிட்டுச் சேய்மைப்படப் பிரித்த கவிநயம் கண்டு கொள்க; மங்கலத்தையும் மாறுபட்ட பண்பையும் புலப்படக் காண நின்றமையால் இரண்டனையும் ஒலி என்றார். அன்றியும் சிவானந்தத்துட் டிளைக்கும் பெரியோர் நன்மை தீமை இரண்டனையும் ஒப்ப நாடுவர் என்ற குறிப்பும் காண்க. ஆயின் இம்மாறுபாடு கருதி வினவியதென்னை எனின், உலகுபகாரமாக எழுந்த திருவருட் குறிப்பாகுமென்க. ஆங்கு உறையும் மறையோர்களை - ஆங்கு - அவ்விடத்து; முன்னர்க் கூறிய மங்கலவியங்கள் அறையும் ஒலி எழுந்த மனைப்பக்கம், சேய்மைச் சுட்டினாற் சுட்டப்படுவது அதுவே யாதலின்; மேல்வரும்பாட்டில், அவர்கள், கலியாணம் இந்தமனை என்று அதனையே அண்மைச் சுட்டினாற் கூறுதல் காண்க. மக்கள் குழுமிக்கூடும் இடம் அதுவாகும் இயல்பும் குறிக்க. இரண்டும் உடனே - மங்கலமும் அமங்கலமுமாக மாறுபட்ட இரண்டும்; உடனே - ஒரே காலத்து ஒரே பக்கமாக. |
|
|