இத்தன் மையினைக் கேட்டருளி யிரங்குந் திருவுள் ளத்தினராம் மொய்த்த முகைத்தார் வன்றொண்டர் தம்மை முன்னே கண்டிறைஞ்ச வைத்த சிந்தை மறையோனு மனைவி தானு மகவிழந்த சித்த சோகந் தெரியாமே வந்து திருத்தா ளிறைஞ்சினார். | 7 | (இ-ள்) இத்தன்மையினை....வன்றொண்டர் தம்மை - இந்தத் தன்மையைக் கேட்டு இரக்கங் கொண்ட திருவுள்ளத்தினைக் கொண்ட பூக்கள் நிறைந்த மாலையினையணிந்த வன்றொண்டரை; முன்னே...மனைவிதானும் - பார்த்து வணங்கவேண்டுமென்று முன்னமே மனம் வைத்திருந்த அந்த வேதியரும் அவரது மனைவியும்; மகவிழந்த....இறைஞ்சினார் - தமது மகவை இழந்த சித்தசோகத்தை அறியாராய் வந்து அவரது திருவடிகளை வணங்கினார்கள். (வி-ரை) இத்தன்மை - முன்பாட்டிற் கூறியவரலாறுகளின் நிலை. இரங்கும்...வன்றொண்டர் - இரங்கும் திருவுள்ளம் - இது வன்றொண்டர் திருவுள்ளது எழுந்த எல்லாவுயிர்களின் மேலும் பொதுவாய்ச் செல்லும் கருணைத் தன்மை; பூததயை என்பர்; மேல் (4237) கூறுவது, அம்மறையோன்பாலும் அவரது மனைவிபாலும் அவர்களது சிவனடிமைப் பண்புகண்டெழுந்த சிறப்புக் கருணைநிலை. முன்னே....சிந்தை- நம்பிகளது பெருமை கேட்டு அவர் திருவடிகளில் அன்பு கொண்டு அவரைக்கண்டு வணங்கவேண்டும் என்று இவர்கள் முன்னே பலநாளும் கொண்டிருந்த ஆர்வமுடைய மனம். சோகம் தெரியாமே - வலியதாகிய புத்திர சோகத்தின்பாற்பட்டு அப்போது அழுதுகெண்டிருந்த இவர்கள், நம்பிகளது வரவு கேட்டவுடன், முன்னர் மனத்துள் அழுந்தியிருந்த ஆர்வ மேலெழப் புத்திரசோகம் இருந்த இடம் தெரியது தானே நீங்க; இவர்களது சிவனடிப்பற்றின் உறைப்புச், சோகத்தைக் கீழாக்கி, மேலோங்கியது; சோகம் தெரியாமை மட்டுமன்றி, முகமலர்ச்சியும் போந்தது என்பதை மேல் வரும் பாட்டாலறிக; நம்பிகளது வரவு தெரிந்து என்பது குறிப்பெச்சம். |
|
|