பாடல் எண் :4236

துன்ப மகல முகமலர்ந்து தொழுவார் தம்மை முகநோக்கி
“இன்ப மைந்தன் றனையிழந்தீர் நீரோÓ வென்ன வெதிர்வணங்கி
“முன்பு புகுந்து போனதது; முன்னே வணங்க முயல்கின்றோம்;
அன்பு பழுதா காமலெழுந் தருளப் பெற்றோÓ மெனத்தொழுதார்.
8
(இ-ள்) துன்பமகல......நோக்கி - மகவிழந்த சோகமாகிய துன்பம் நீங்க முகமலர்ந்து தொழுவாராகிய மறையவனையும் மனைவியையும் எதிர்நோக்கி, (வன்றொண்டர்); இன்ப....என்ன - இன்பமகனை யிழந்தவர்கள் நீங்களோ? என்று வினவ; முன்பு புகுந்து...தொழுதார் அந்நிகழ்ச்சி முன் காலத்து நேர்ந்து கழிந்தது; முன்னமே தேவரீரை வணங்க முயல்கின்றோம்; எங்கள் அன்பு வீண்போகாமல் தேவரீர் இங்கு எழுந்தருளும் பேறு பெற்றோம் என்று சொல்லித் தொழுதார்கள்.
(வி-ரை) துன்பமகல முகமலர்ந்து - துன்ப நீக்கம் மட்டுமேயன்றி இன்ப ஆக்கமுங் கொண்டு.
இன்ப மைந்தன் - இல்லறத்துக்கு நன்கலமாய் இன்பந் தரத்தக்க மகன்; மகன் இறந்து பல காலமாகியும் இங்கு இன்ப மைந்தன் என்றது அவன் மீண்டு உயிர் பெற்று எழுந்து இன்பந் தரவுள்ள நிலையின் திருஅருளின் முற்குறிப்பு.
எதிர் வணங்கி - முன்னர் “இறைஞ்சினார்Ó (4236) என்றது அவர்கள் முதலிற் செய்த வணக்கம். இங்கு வணங்கி என்றது நம்பிகளின் அருள் வினாவுக்கு விடை கூறு முகத்தால் வணங்கிக் கூறும் மரபு பற்றிய வணக்கம்.
அது முன்பு புகுந்து போனது - என்க. அது வெகுநாட்களின் முன் கழிந்த செயல். அது பற்றிக் கவலை வேண்டா என்பது.
முன்னே வணங்க முயல்கின்றோம் - தேவரீரைக் கண்டு வணங்கப் பலகாலமாக முயன்று வருக்கின்றோம்; இதனால் இவர்கள் நம்பிகளிடம் நீண்ட காலமாக அன்பு பூண்டொழுகிய திறம் புலப்படக் கூறியவாறு.
அன்பு பழுதாகாமல்...பெற்றோம் - நாங்கள் செலுத்திய அன்பின்றிறம் வீண்போகாமல் தேவரீர் எமது முயற்சியின்றியே இங்கு எழுந்தருளும் பேறு பெற்றோம்; பல நாட் செய்த அன்பாகிய தவப்பயனாய் இன்று இப்பேறு பெற்றோம் என்றபடி. அப்பூதியார் அரசுகள் வரலாறு இங்கு நினைவு கூர்தற்பாலது. முன் (1792)ல் உரைத்தவையும் பிறவும் பார்க்க.
தொழுதார் - இது சிறப்பு வணக்கம்.
தம்மை நோக்கி யந்த - என்பதும் பாடம்.