பாடல் எண் :4237

“மைந்தன் றன்னை யிழந்ததுயர் மறந்த நான்வந் தணைந்ததற்கே
சிந்தை மகிழ்ந்தார் மறையோனு மனைவி தானுஞ் சிறுவனையான்
அந்த முதலை வாய்நின்று மழைத்துக் கொடுத்தே யவிநாசி
எந்தை பெருமான் கழல்பணிவேÓ னென்றார்; சென்றா ரிடர்களைவார்.
9
(இ-ள்) மைந்தன்.....மறந்து - மகனை இழந்த துக்கத்தினையும் மறந்து; நான்...தானும் - நான் வந்ததன் பொருட்டே மறையவனும் மனைவிதானும் மனம் மகிழ்ந்தார்கள்; சிறுவனை.....பணிவேன் - அச்சிறுவனை, விழுங்கிய அந்த முதலையின் வாயினின்றும் அழைத்துக் கொடுத்த பின்னரே, நான் அவிநாசியாகிய எமது பெருமானது திருவடிகளைச் சென்று வணங்குவேன்; என்றார் சென்றார் இடர்களைவார் - தம்பால் அன்பினாற் சென்றவர்களது இடரைக் களைவாராகி நம்பிகள் என்று இவ்வாறு சொன்னார்.
(வி-ரை) சென்றார் இடர்களைவார் - என்றார் என்று கூட்டுக. சென்றார் - அன்பினாலே வந்து தம்பால் அடைந்தவர்கள்; களைவார் - களைவாராகிய நம்பிகள். மைந்தன்...மறந்து - புத்திரசோகம் மறக்க முடியாததாகிய பெருவலிமையுடையது என்பது; துயர் - வலிய அத்துயரினையும் என உயர்வு சிறப்பும்மையும் உருபும் தொக்கன.
நான் வந்தணைந்ததற்கே - மகிழ்ந்தார் - நான் - பலகாலம் தாங்கள் கண்டுபணிய எண்ணி முயன்றிருந்ததற்குப் பொருளாகிய நான். வந்து - எதிர்பாராது தாமே வந்து; அடிமைத்திறம் புத்திர சோகத்தையும் கீழாக்கி மேலிட்டது என்பது அவர்களது அன்பின் பெருமையினைக் காட்டிற்று; ஆதலின் அதன் பொருட்டு அன்பரின் துயர் மாற்றும் வகை செய்வேன் என்பதாம். இவ்வாறன்றி, நான் வந்தணைந்ததற்கே என்பதனைத் தமது பெருமை தோன்றக் கூறியவாறும், அழைத்துக் கொடுத்தே என்பதனைத் தமது செயலின் வலிமையாகக் கூறியவாறும், பிறவாறுமாக உரைப்பன வெல்லாம் பொருந்தா என்க; மனைவிதானும் - மகனை இழந்த துயர் பெரிதும் ஆற்றாளாகிய நிலை தாயினுக்கு உளதாம்; அத்தகைய அவளும் என்ற குறிப்புப்படக் கூறியவாறு; மனைவியும்; தான் - அசை.
சிறுவனை - அந்த முதலை என்றதற்கேற்ப அச்சிறுவனை எனச் சுட்டு விரிக்க.
யான் - பணிவேன் - என்று முடிக்க; யான் - அழைத்துக் கொடுத்தே - என்றது நான் இறைவரை வேண்டி அவரருளாற் பெற்றுக் கொடுப்பேன் என்றபடியாம்; “முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையேÓ (தேவா) என்ற பதிகம் காண்க. இவ்வாறன்றி, நம்பிகள் தாமே அழைத்துக் கொடுக்க ஏன்று கொண்டார் என்றுரைத்தல் பொருந்தாதென்க; தாமே அழைத்துக் கொடுத்தல் துணிந்தார் என்றுரைப்பின், அஃது, இறைவன் போலவே ஐந்தொழிலியற்றும் தன்மை ஏனை உயிர்களுக்கும் உண்டாம் எனப்பட்டுச், சிவாகமங்களின் துணிபுக்கு மாறுபட்டுப் பிழையாய் முடியும். “ஈசன் தியல்பரு ளெய்துயிரியற்றல், பேசுத றவறெனப் பெருமறை யறைய, ஐந்தொழி லுயிருந் தந்திட றகுமே?, ஆவதென் முன்னா ணாவலர் பெருமான், பண்டொரு முதலை யுண்டமைந் தனைவர வழைத்தன னென்றாய் பிழைப்பில் ததூஉம்; “தந்திடவேண்டுÓ மென்றன ரன்றேÓ (சங்கற்ப நிராகரணம் - சிவசமவாதி நிராகரணம் - 30 - 36). என இதனை ஞான சாத்திரம் விளக்குதல் காண்க.
அழைத்துக் கொடுத்தே - அழைப்பித்துத் தந்தை தாயர்கட்குக் கொடுத்த பின்னரே; ஏகாரம் - தேற்றம்; பணிவேன் - சென்று திருக்கோயிலில் வணங்குவேன்; அழைத்துக் கொடுக்கும் இடத்தும் இறைவரை வேண்டிப் பணிந்தே தருகின்றாராதலின் இங்குப் பணிவேன் என்றது திருக்கோயிலிற் சென்று வணங்கும் வழிபாடு குறித்து நின்றது. நம்பிகள் சென்றவழி புக்கொளியூர் நகர்த் திருவீதியும் முதலை மடுவும் தாண்டி, அவற்றின் வடக்கே சென்று, திருக்கோயிலை அடையும் நிலையில் அந்நாளில் இருந்தது என முன்னர் உரைக்கப்பட்டது.
அவிநாசி எந்தை - அவிநாசியாகிய எந்தை; அவிநாசி - இறைவரது பெயர்; முதலையும் அதனால் விழுங்கப்பட்ட மைந்தனும் நாசமாயினவாகக் காணப்படினும், நாசமின்றி நல்கவல்லவர் இங்கு இறைவராதலின் அவிநாசி என்ற இவ்வாற்றாற் கூறினார். “புக்கொளியூ ரவிநாசியே!Ó என்பது பதிகம்.
“மைந்தன்.....பணிவேன்Ó என்றார் - இது நம்பிகள் தமது திருவுள்ளத்திற் செய்து கொண்ட அருட்சங்கற்பம்.
நான் - யான் - முன்னையது மறையவனும் மனைவியும் தம்மை எண்ணிய நிலை; பின்னையது தாம் இறைவரருளை எண்ணிய நிலை; ஆதலிற் கூறியதுகூற லன்மையுணர்க.