பரவும் பெருமைத் திருப்பதிகம் பாடிப் பணிந்து போந்தன்பு விரவு மறையோன் காதலனை வெண்ணூல் பூட்டி யண்ணலார் முரச மியம்பக் கலியாண முடித்து, முடிச்சே ரலர்தம்பாற் குரவ மலர்ப்பூந் தண்சோலை குலவு மலைநா டணைகின்றார். | 14 | (இ-ள்) பரவும்....போந்து - துதிக்கின்ற பெருமையுடைய திருப்பதிகத்தினைப்பாடித் திருக்கடைக் காப்புச் சாத்தி வணங்கிப் புறம்போந்து; அன்பு....முடித்து - பெருமையுடைய நம்பிகள் (தம்பால்) அன்பு பொருந்திய வேதியனது மகனைப் பூணூல் அணிவித்து முரசங்கள் சத்திக்க உபநயன மங்கலம் முடித்து; முடிச்சேரலர் தம்பால்....அணைகின்றார் - முடிமன்னராகிய சேரனாரிடத்துச் சேர்வதற்கு, நறுமணமுடைய மலர்கள் நிறைந்த அழகிய குளிர்ந்த சோலைகள் நிறைந்த மலை நாட்டில் அணைகின்றாராய், (வி-ரை) பரவும் பெருமை - இறைவரைத் துதிக்கும் பெருமையுடைய என்றும், உலகவராற் துதிக்கப்படும் பெருமை என்றும் உரைக்க நின்றது. பாடி - பாடி முடித்துத் திருக்கடைக் காப்புச் சாத்தி; இத்திருப்பதிகம் பொய்கைக் கரையிற் றொடங்கப்பட்டு “உரைப்பாருரைÓ என்று நான்காவது பாட்டளவும் அங்கு அருளப்பட்டது; அதன்பின் மகனை முதலை வாயினின்று பெற்றபின் அவனையும் உடன்கொண்டு திருக்கோயிலுக்குப் போந்து திருமுன்பு ஏனைய ஆறுபாட்டுகளும் அருளி நிறைவாக்கப்பட்டது என்பதாம். “அழைத்துக் கொடுத்தே அவிநாசி யெந்தை பாதம் பணிவேன்Ó (4237) என்றதும், “உரைப்பா ருரையென்றெடுத்ததிருப் பாட்டு முடியாமுன்.....தருவித்தான்Ó (4239) என்றதும், உடன், “முதலை கரையின்கட் கொடுவந் துமிழந்தÓ (4240) என்றதும், அதனைத் தொடர்ந்து அரனார் தம்மை - புதல்வனையும் கொண்டுபணிந்தார்Ó (4291) என்றதும் காண்க. போந்து - கோயிலின் புறம்பு போந்து. அன்பு விரவு மறையோன் - அன்பு - நம்பிகள் திருவடிக் கடிமைபூண்ட அன்பு. அன்பு விரவு - விரவியதனால் என்று காரணக் குறிப்புடன் நின்றது. வெண்ணூல் பூட்டிக் - கலியாணம்முடித்து - உபநயனச் சடங்காகிய மங்கலம் தாமே முன்னின்று செய்வித்து; பூணூற்கலியாணம் என்பது மரபு; பிரமோப தேசத்தால் ஞானஞ்சேர்தல் குறிப்பு. முரசம் இயம்ப - சிறிது நேரம் முன்பு அழுகையொலியாயிருந் அந்தமனையில் முரசம் இயம்ப மங்கலவொலி முழங்கச்செய்து. வெண்ணூல் பூட்டி - எதிர்மனையில் இம்மகனுடனிருந்து பிழைத்த மகனது உபநயனங் காரணமாக இவ்வரலாறு நிகழ்ந்ததாதலின் அக்கருத்தை முற்றுவித்து என்பது; திருமருகலில் ஆளுடைய பிள்ளையார் வணிகனை விடந்தீர்த்துத் தாமே அவர்களுக்கு மணம்புணரும் பெருவாழ்வும் வகுத்துவிட்ட வரலாறு இங்கு நினைவு கூர்தற்பாலது. சேரலர்பால்.....அணைகின்றார் - தாம் கருதிவந்த செயல் (4231). |
|
|