பாடல் எண் :4247

மலைநாட் டெல்லை யுட்புகுத வந்த வன்றொண் டரைவரையிற்
சிலைநாட் டியவெல் கொடித்தானைச் சேரர் பெருமா னெதிர்சென்று
தலைநாட் கமலப் போதனைய சரணம் பணியத் தாவில்பல
கலைநாட் டமுத வாரூரர் தாமுந் தொழுது கலந்தனரால்.
19
(இ-ள்) மலைநாட்டு ......வன்றொண்டரை - மலை நாட்டின் எல்லையினுள்ளே புகுதும்படி வந்தணைந்த நம்பிகளை; வரையில்.....சேரர் பெருமான் - மேரு மலையினுச்சியில் தமது விற்கொடியைப் பொறித்த வெற்றிக் கொடியினையும் சேனைகளையும்உடைய சேரமான் பெருமானார்; எதிர் சென்று......பணிய - எதிர் கொண்டு சென்று, அன்றலர்ந்த தாமரை மலர் போன்ற பாதங்களை வணங்க; தாவில்..கலந்தனர் - கேட்டினை நீக்கும் அமுதமயமாகிய பல கலைகளையும் நாட்டும் நம்பியாரூரரும் எதிர் தொழுது கலந்தனர்; (ஆல் - அசை).
(வி-ரை) மலை நாட்டு எல்லையுட் புகுதவந்த - மலநாட்டின் எல்லை வரையிலும் சென்று சேரலனார் எதிர் கொண்டனர் என்பதாம்.
வரையில் சிலைநாட்டிய - வரை - மேரு; சிலை - வில்; சிலை நாட்டுதல் - மேருமலை வரையில் செயித்து அதனுச்சியில் தமது விற்கொடியினைப் பொறித்தல்.
தலைநாட் கமலப் போது - அன்று காலை யலர்ந்த தாமரை மலர். தாவில்பல கலை நாட்டு - தாவில் - கேட்டினை யில்லையாகச் செய்யும்; கலை நாட்டு கலைகளையும் தாபிக்கும்; பால கலைகளுக்கும் இருப்பிடமாகிய திருப்பதிகங்களை அருளும் என்பதாம். நம்பிகளது பல பதிகங்களின் பயன் விளைந்தமையும் காண்க.
அமுதம் - பிறவிப்பிணி போக்கும்; முதலை வாய்ப்பிள்ளை யழைத்த வரலாற்றுக் குறிப்பு. கலைகள் உணர்த்தும் சீவன் முத்தராகிய என்றலுமாம்.
தாமும் - சேரனார் பணிந்தது போலத் தாமும் தொழுது என்று உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.
கலந்தனர் - கூடிக் கிடைத்தனர்; கூடினர்.