ஒருவ ரொருவ ரிற்கலந்து குறைபா டின்றி யுயர்காதல் இருவர் நண்பின் செயல்கண்ட விரண்டு திறத்து மாந்தர்களும் பெருகு மகிழ்ச்சி கலந்தார்த்தார் பெருமா டமிழின் பெருமாளை வருகை வரையின் மிசையேற்றித் தாம்பின் மதிவெண் குடைகவித்தார். | 21 | (இ-ள்) ஒருவர்......கண்ட - ஒருவர் ஒருவருள்ளே மனங்கலந்து எவ்விதமான குறைவும் இல்லாமல் உயர்வாகிய பெரிய விருப்பமுடைய இருவரது நட்பின் செயலைக் கண்ட; இரண்டு....ஆர்த்தார் - இருபக்கத்தில் உள்ள மக்களும் பெரிய மகிழ்ச்சி பொருந்தி ஆரவாரித்தார்கள்; பெருமாள்....கவித்தார் - சேரமான் பெருமாள் தமிழின் பெருமாளாகிய நம்பிகளைத் தாம் ஏறி வந்த யானையின் மேல் ஏற்றித் தாம் அவர் பின்னே யமர்ந்து மதிபோன்ற வெண் கொற்றக் குடையினைக் கவித்தனர். (வி-ரை ) ஒருவர் ஒருவரிற் கலந்து - கலத்தலாவது மன வொற்றுமையுடைய நட்பினால் ஒன்று கூடுதல்; ஒருவர் ஒருவரில் - நம்பிகள் மனம் சேரலனாருள்ளும், அவர்மனம் நம்பிகள் மனத்துள்ளும் நண்பினால் ஒருமைப்படுதல்; “காத லிருவர் கருத்தொருமித்துÓ உயர்காதலிருவர் நண்பின்செயல் - உயர்ந்த பெரு விருப்பத்தினை மேற்கொண்டமையால் இவ்விருவரது நட்பினால் விளைத்த முனபாட்டிற் கூறிய செயல். இரண்டு திறத்து மாந்தர்கள் - நம்பிகள் உடன் வந்த பரிசனங்களும்,சேரலனாருடன் போந்த மந்திரிமார்கள் முதலியோரும். பெருமாள் தமிழின் பெருமாளை - இருவரும் தோழமையால் ஒப்பாந்தன்மை பெற, இருவரையும் பெருமாள் என்ற ஒரு தன்மை குறிக்கும் பெயராற் கூறினார்; பெருமாள் - அரசர். சேர அரசர்களைப் பெருமாள் என்று வழங்குதல் மரபு; தமிழின் பெருமாள் - தமிழின் தலைவர்; “தமிழ்நாதன்Ó (232). வரு கைவரை - வரும் - தாம் ஏறிக்கொண்டுவர வந்த; கைவரை - யானை; கையையுடைய மலைபோன்றது என்பது சொற்பொருள். தாம்பின்.....கவித்தார் - அவர்பின் தாம் ஏறி அமர்ந்து வெண் கொற்றக் குடை ஏந்தினார்; கவித்தல் - முடிமீது நிழல்படக் குடைபிடித்தல். “பிடிமேற் பார், முழுதுமேத்த நம்பியை முன் பேற்றிப் பின்பு தாமேறிப், பைம்பொன் மணிச்சா மரைவீசிÓ (3894); என்றபடி முன் முறையிற் சேரலனார் யானையின்மேல் நம்பிகளை முன் ஏற்றிப் பின்பு தாம் அமர்ந்து சாமரை யிரட்டினார்; இங்கு நீண்ட தூரம் செல்லவேண்டியிருத்தலின் வெண்குடை கவித்தார் என்பது. |
|
|