பாடல் எண் :4250

உதியர் பெருமாள் பெருஞ்சேனை யோதங் கிளர்ந்த தெனவார்ப்பக்
கதிர்வெண் டிருநீற் றன்பர்குழாங் கங்கை கிளர்ந்த தெனவார்ப்ப
எதிர்வந்த திறைஞ்றுசு மமைச்சர்குழா மேறு மிவுளித் துகளார்ப்ப
மதிதங் கியமஞ் சணியிஞ்சி வஞ்சி மணிவா யிலையணைந்தார்.
22
(இ-ள்) உதியர்.....ஆர்ப்ப - சேரமன்னரது பெரிய சேனை கடல் கிளர்ந்தது போல ஆரவாரிக்க; கதிர்வெண்.....ஆர்ப்ப - ஒளிவீசும் வெள்ளிய திருநீற்றினை அணிந்த அன்பர் கூட்டங்கள் கங்கையாறு முழங்கி எழுந்தது போல ஆரவாரிக்க; எதிர்...துகள் ஆர்ப்ப - எதிரே வந்து வணங்கும் அமைச்சர் கூட்டங்கள் ஏறிவரும் குதிரைகளின் காலிலிருந்து எழும்பும் மண்தூசிகள் எங்கும் எழுந்து பரவ; மதி....அணைந்தார் - சந்திரன் தவழும் மேகங்கள் படியும் மதில்களையுடைய வஞ்சிமா நகரத்தின் அழகிய வாயிலை அணைந்தனர் ( இவ்விரு பெருமக்களும்).
(வி-ரை) ஓதம் கிளர்தல் கடலோசையினையும், கங்கை கிளர்தல் - தூய வெள்ளிய பரப்பினையும் உணர்த்தின. கங்கைநீர் - மிகத்தூய வெண்மை நிற முடையது என்பது.
சேனை - நம்பிகளை எதிர்கொள்ளச் சேரனாருடன் வந்தவை.
அன்பர் கூட்டம் - நம்பிகளுடன் வந்தவர்; சேனை ஆர்த்தமை -சேரனார் செயலைக்கண்டு “நல்ல தோழர் நம்பெருமா டமக்கு நம்பிÓ (3895) என்று கருதியதனாலும், அன்பர் ஆர்த்தமை - சேரனாரது அன்பின் பெருமை கண்டதனாலுமாம். கங்கை கிளர்ந்ததென - “மன்னியொளிர் வெண்மையினாற் றூய்மையினால்....கங்கையணைந்ததெனும் கவின்காட்டÓ (2550) என்றது காண்க. கங்கை நீர் வெண்ணிற முடையது. “கங்கையும் ....கூடிய....Ó (பொன்வ - 90).
இவுளித்துகள் - குதிரைகள் வேகத்தில் செல்லும் போது கிளம்பும் காற்றூசி; இவுளி - குதிரை.
வஞ்சி - சேரனாருடைய தலைநகரம். திருவஞ்சைக்களம் -கொடுங்கோளுர் என்பது (3890 - 3892) பார்க்க. இரண்டும் ஒன்று சேர்த்துக் கூறப்படுவன.