அரிவையர் தெருவி னடம்பயி லணிகிளர் தளிரடி தங்கிய பரிபுர வொலிகள் கிளர்ந்தன பணைமுர சொலிகள் பரந்தன சுரிவளை நிரைகள் முரன்றன துணைவர்க ளிருவரும் வந்தணி விரிதரு பவன நெடுங்கடை விறன்மத கரியி னிழிந்தனர். | 24 | (இ-ள்) அரிவையர்......கிளர்ந்தன - தெருவிலே ஆடற் பெண்கள் நடம்பயில்கின்ற அணிகள் ஒலிக்கின்ற தளிர்போன்ற பாதங்களில் பொருந்திய சிலம்புகளின் ஒலிகள் மேலெழுந்தோங்கின; பணை....பரந்தன - பெரிய முரசங்களின் ஒலிகள் பரவியன; சுரிவளை...முரன்றன - சுழியுடைய சங்குக் கூட்டங்கள் வரிசைகளாக ஒலித்தன; துணைவர்கள்....இழிந்தனர் - தோழர்கள் இருவரும் வந்து அழகுவிரிந்த அரண்மனையில் நீண்டவாயிலில் தாம் செலுத்திவந்த வல்லமைமிக்க யானையினின்றும் இறங்கினர். (வி-ரை) தெருவில் அரிவையர் நடம்பயில் என்க. அடிதங்கிய - அடியில் அணிந்த; பரிபுரம் - சிலம்பு. பணைமுரசு - பெரிய முரசங்கள்; முரசு விசேடம் என்றலுமாம், கூட்டமாகிய என்பதும் பொருந்தும். பணை - பண்ணை; கூட்டம். சுரிவளை - சுரி - உள்ளே சுழிகளை உடைய; முரலுதல் - சத்தித்தல். வந்து - இழிந்தனர் - என்று கூட்டுக. அணி விரிதரு பவனம் - அணிவகைகள் பெருத்த; அணி - அலங்கார வகை; பவனம் - அரண்மனை; கடை - வாயில். முன்முறை நம்பிகள் எழுந்தருளியது முதல்முறை ஆதலின் திருவஞ்சைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பின் அரண்மனையடைந்தனர். இம்முறை நேரே அரண்மனை வாயிலுக்கு வந்தனர். முன்முறை சேரனார் அழைத்து வந்தமையும் கருதுக. |
|
|